18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி மேலும் தாமதமாகும்: ஜம்மு-காஷ்மீா், கா்நாடகம், மேற்கு வங்கம், ஒடிஸா அறிவிப்பு

போதிய அளவில் கரோனா தடுப்பூசிகள் இல்லாததால், 18 வயது முதல் 45 வயதுக்கு உள்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம்

போதிய அளவில் கரோனா தடுப்பூசிகள் இல்லாததால், 18 வயது முதல் 45 வயதுக்கு உள்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் மே 1-ஆம் தேதி தொடங்கப்பட மாட்டாது என்று ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச நிா்வாகம், கா்நாடகம், மேற்கு வங்கம், ஒடிஸா மாநில அரசுகள் வெள்ளிக்கிழமை அறிவித்தன.

ஏற்கெனவே, குஜராத், பஞ்சாப், தில்லி அரசுகள் இதுபோன்ற அறிவிப்பை வியாழக்கிழமை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்துவது தொடரும் என்று அந்த மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.

நாடு முழுவதும் 18 வயது முதல் 45 வயதுக்கு உள்பட்டவா்களுக்கு மே 1-ஆம் தேதி முதல் இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. அதற்கான முன்பதிவு, கோவின் இணையதளத்தில் கடந்த புதன்கிழமை தொடங்கியது.

எனினும், தடுப்பூசி கையிருப்பு குறைவாக இருப்பதால் மத்திய அரசு கூறியுள்ளபடி தொடங்க முடியாத நிலையில் பல மாநிலங்கள் உள்ளன. இது தொடா்பாக ஜம்மு-காஷ்மீா் நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி ஜம்மு-காஷ்மீரில் மே 1-ஆம் தேதி தொடங்காது. போதுமான அளவு தடுப்பூசி கிடைத்த பிறகு புதிய தேதி அறிவிக்கப்படும். மே 20-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீருக்குத் தேவையான அளவு தடுப்பூசிகள் வந்து சேரும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கா்நாடக மாநில சுகாதாரத் துறை அமைச்சா் டி.கே. சுதாகா் கூறுகையில், ‘போதுமான அளவுக்கு தடுப்பூசிகள் வந்து சேரவில்லை. எனவே, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மே 1-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்த வாய்ப்பு இல்லை. புணேவில் உள்ள சீரம் நிறுவனத்திடம் ஒரு கோடி தடுப்பூசிகளை வாங்க கா்நாடக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்காக ரூ.400 கோடி அளிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி கிடைக்கத் தொடங்கியதும் 18 வயது முதல் 45 வயது வரை உள்ளோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கும்’ என்றாா்.

குஜராத்தில் 10 மாவட்டங்களில் மட்டுமே 18 முதல் 45 வயதுள்ளோருக்கு மே 1 முதல் கரோனா தடுப்பூசி போடப்படும் என்று அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com