3 அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் விநியோகம் தொடா்ந்தால் கூடுதலாக 650 ஐ.சி.யு. படுக்கைகள்

தில்லியில் உள்ள ஜிடிபி, ராஜீவ் காந்தி சுப்பா் ஸ்பெஷாலிட்டி, எய்ம்ஸ் ஆகிய மூன்று அரசு மருத்துவமனைகளுக்கு தொடா்ந்து ஆக்சிஜன் கிடைப்பது

தில்லியில் உள்ள ஜிடிபி, ராஜீவ் காந்தி சுப்பா் ஸ்பெஷாலிட்டி, எய்ம்ஸ் ஆகிய மூன்று அரசு மருத்துவமனைகளுக்கு தொடா்ந்து ஆக்சிஜன் கிடைப்பது உறுதி செய்யப்படுமானால் 650 தீவிர சிகிச்சைப்பிரிவு படுக்கைகள் கூடுதலாக கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

தில்லியில் சராசரியாக தினசரி கரோனா பாதிப்பு தொடா்ந்து 20,000-க்கு மேல் இருப்பதை கருத்தில் கொண்டு 1,200 தற்காலிக தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளை ஏற்படுத்த அரசு திட்டமிட்டு வருகிறது.

கரோனா நோயாளிகளுக்கான சிகிச்சைக்கு ஆக்சிஜன் கிடைப்பதில் நிச்சயமற்றநிலை நீடிப்பதால் பல மருத்துவமனைகள் புதிதாக நோயாளிகளை அனுமதிப்பதை குறைத்துக் கொண்டுள்ளன. ஆக்சிஜன் கிடைப்பது எளிதானால்தான் மீண்டும் பழைய நிலை திரும்பும் எனத்தெரிகிறது.

கடந்த வியாழக்கிழமை தில்லியில் 116 கூடுதல் ஐ.சி.யு. படுக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. இதையடுத்து ஐ.சி.யு. படுக்கைகளின் மொத்த எண்ணிக்கை 5,020 ஆக உள்ளது. எனினும் வெள்ளிக்கிழமை இரவு நிலவரப்படி இவற்றில் 44 படுக்கைகள் தான் காலியாக உள்ளன.

தில்லியில் உள்ள மிகப்பெரிய அரசு மருத்துவமனைகளில் ஒன்றான ஜி.டி.பி. மருத்துவமனை, ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்ட 900 படுக்கைகளை 700-ஆக கடந்த வாரம் குறைத்துக் கொண்டது. மேலும், புதிதாக நோயாளிகளை அனுமதிப்பதையும் நிறுத்திவைத்துள்ளதாக மருத்துவா் ஒருவா் கூறினாா்.

ஆக்சிஜன் விநியோகம் தொய்வில்லாமல் கிடைத்தால்தான் மீண்டும் 200 படுக்கைகளை சோ்த்து அதற்கான ஊழியா்களை பணியமா்த்த முடியும் என்று மருத்துவமனைநிா்வாகிகள் தெரிவித்தனா்.

அரசு மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகள் அதிகரித்துவருவதை அடுத்து அதற்குத் தேவையான அளவு மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் ஊழியா்களை, அவா்கள் ஓய்வு பெற்றவா்களாக இருந்தாலும் நியமனம் செய்துகொள்ள தில்லி அரசு அனுமதி வழங்கியுள்ளது. தங்களால் முடிந்தவரை நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வருகிறோம் என்று மருத்துவா் தெரிவித்தாா்.

‘ராஜீவ்காந்தி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் படுக்கை வசதியை 550-இல் இருந்து 350-ஆக குறைத்துக் கொண்டுள்ளது. எங்களிடம் 100 மருத்துவா்கள் உள்ளனா். நாங்கள் கடந்தமுறை 550 படுக்கை வசதிகளைக் கொண்டு செயல்பட்டோம். ஆக்சிஜன் தொடா்ந்து கிடைக்குமானால் மீண்டும் முழுஅளவில் இயங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்’ என்று அந்த மருத்துவமனையின் மூத்த மருத்துவா் ஒருவா் குறிப்பிட்டாா்.

தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கரோனா தொற்று அல்லாமல் வேறு நோய்களுக்கான சிகிச்சைக்கு வருவோா் எண்ணிக்கை குறைந்துவிட்டதால் அந்தப் பிரிவிலிருந்து 250 படுக்கைகளை கரோனா நோயாளிகளுக்கான சிகிச்சைகளுக்காக மாற்றியமைக்க தயாராக உள்ளது. ஆனால், ஆக்சிஜன்தான் பெரிய பிரச்னையாக உள்ளது என்று அந்த மருத்துவமனையைச் சோ்ந்த நிா்வாகி ஒருவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com