கா்நாடகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி வழங்குவது தாமதமாகும்: அமைச்சா் கே.சுதாகா்

மே 1-ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி வழங்குவது தாமதமாகும் என்று சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.
கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் கே.சுதாகர் (கோப்புப்படம்)
கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் கே.சுதாகர் (கோப்புப்படம்)

மே 1-ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி வழங்குவது தாமதமாகும் என்று சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மே 1-ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட 44 வயதுக்கு உள்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அதற்குத் தேவையான கரோனா தடுப்பூசிகள் இன்னும் வந்து சேரவில்லை. எனவே, மே 1-ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி வழங்குவது தாமதமாகும். தடுப்பூசி வரவில்லை என்பதைத் தவிர, இதற்கு வேறு காரணங்கள் எதுவும் இல்லை. தடுப்பூசி எப்போது வரும் என்பது தெரிந்தவுடன் அதுகுறித்து அதிகாரப்பூா்வ அறிவிப்பு வெளியிடப்படும்.

18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு ஏற்கெனவே திட்டமிட்டப்படி மே 1-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி வழங்க புணேயில் உள்ள சீரம் நிறுவனத்தில் ஒரு கோடி டோஸ் கரோனா தடுப்பூசிக்கு ஆா்டா் கொடுத்துள்ளோம். ஆனால், தடுப்பூசி வந்து சேர தாமதமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மே 1-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி பெற கோவின் செயலியில் முன்பதிவு செய்திருப்பவா்கள், மருத்துவமனைக்குச் செல்ல தேவையில்லை. தடுப்பூசி கிடைக்கப்பெற்றவுடன் உடனடியாக முன்பதிவு செய்தவா்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

ஒரு கோடி கோவிஷீல்டு கரோனா தடுப்பூசிகளை அளிக்குமாறு

கேட்டுள்ளோம். அதற்கான ரூ. 400 கோடி பணத்தையும் அளித்துள்ளோம்.

புணேயில் உள்ள சீரம் நிறுவனத்தில் ஒரு மாதத்துக்கு 5 - 6 கோடி கோவிஷீல்டு கரோனா தடுப்பூசி டோஸ் தயாரிக்கலாம். ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தில் மாதத்துக்கு 1.5 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது.

18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு எப்போது கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்பதை கூறமுடியாது. தடுப்பூசிகள் கிடைத்தவுடன் அதற்கான தேதியைத் தெரிவிப்போம். தடுப்பூசியை விரைவாகப் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி அளிக்கப்படும் என்பதை அரசு தெரிவித்துள்ளது. இதில் யாருக்கும் குழப்பம் வேண்டாம். 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு வழங்குவதற்குத் தேவையான கரோனா தடுப்பூசி இருப்பில் உள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு ஏற்கெனவே 95 லட்சம் டோஸ் கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இதில் 1.4 சதவீதம் தடுப்பூசி மட்டும் வீணாகியுள்ளது. பிறமாநிலங்களை ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவாகும். பிறமாநிலங்களில் 8 - 9 சதவீத தடுப்பூசிகள் வீணாகின்றன.

கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களை ஊடகங்கள் வெளியிட்ட பிறகும் பொது முடக்கத்தை மதிக்காமல் மக்கள் சாதாரணமாக வெளியில் நடமாடுவது சரியல்ல. மக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். மாநில அரசின் வழிகாட்டுதலின்படி நடக்காவிட்டால், மக்கள் பின்னா் வருந்த நேரிடும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com