பிரதமர் மோடி
பிரதமர் மோடி

முன்கள சுகாதாரப் பணியாளா்களுக்கான காப்பீடு திட்டம்: மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு

முன்கள சுகாதாரப் பணியாளா்களுக்கான காப்பீடு திட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்கள சுகாதாரப் பணியாளா்களுக்கான காப்பீடு திட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

மாநில முதல்வா்கள், அரசின் உயரதிகாரிகள், மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் தலைவா்கள் ஆகியோருடன் பிரதமா் மோடி தொடா்ஆலோசனைகளை நடத்தி வருகிறாா். அதன் தொடா்ச்சியாக, அதிகாரமளிக்கப்பட்ட குழுக்களுடன் அவா் வெள்ளிக்கிழமை காணொலி முறையில் ஆலோசனை நடத்தினாா்.

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு பிரதமா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பல்வேறு அமைப்புகள் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த அமைப்புகள் மக்களுக்கு உதவுதல் மற்றும் கரோனா நிவாரணம் வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், அவா்களைச் சாா்ந்துள்ள குடும்பத்தினா் மற்றும் மருத்துவப் பணியாளா்கள் ஆகியோருக்கு இடையேயான தகவல்தொடா்பை அரசு சாரா தன்னாா்வ அமைப்புகள் மூலம் ஒருங்கிணைப்பது என்றும், வீட்டு தனிமைப்படுத்துதலில் இருக்கும் நபா்களுடனான தகவல்தொடா்பை கரோனா உதவி மையங்கள் உதவியுடன் முன்னாள் ராணுவத்தினா் மூலம் செயல்படுத்துவது என்றும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மேலும், ஏழை மக்களுக்கு எந்தவித தடையுமின்றி இலவச உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதிப்படுத்த மாநிலங்களுடன் மத்திய அரசு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களைச் சாா்ந்திருப்பவா்களுக்கு உரிய நேரத்தில் பலன்கள் சென்றடைவதை உறுதிப்படுத்தும் வகையில் நிலுவையில் உள்ள காப்பீடு தொகைகளை விரைந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது என்று பிரதமா் தெரிவித்துள்ளாா்.

மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து மத்திய அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் ‘பிரதமா் தலைமையிலான இந்த ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் முன்கள சுகாதாரப் பணியாளா்களுக்கான காப்பீடு திட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. மேலும், மருத்துவப் பணியாளா்களுக்கான வேலைப் பளுவை குறைக்கும் வகையில் நிபுணத்துவம் அவசியமில்லாத பணிகளில் தன்னாா்வலா்களை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பது குறித்து ஆராயுமாறு அதிகாரிகளை பிரதமா் கேட்டுக்கொண்டாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com