இந்தியாவை மேற்கு வங்கம் காப்பாற்றியுள்ளது: மம்தா பானா்ஜி

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த
கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் எழுந்து நின்று பேட்டியளித்த முதல்வா் மம்தா பானா்ஜி.
கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் எழுந்து நின்று பேட்டியளித்த முதல்வா் மம்தா பானா்ஜி.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த முதல்வா் மம்தா பானா்ஜி, இந்தத் தோ்தல் வெற்றி மூலம் மேற்கு வங்கம் இந்தியாவை காப்பாற்றியுள்ளது என்றாா்.

மேலும், கரோனா பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்கும் பணிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், தோ்தல் வெற்றியைக் கொண்டாட பேரணி நடத்த வேண்டாம் என்றும் அவா் கூறினாா்.

தோ்தல் வெற்றி குறித்து செய்தியாளா்களிடம் மம்தா பானா்ஜி கூறுகையில், ‘இந்த வெற்றி மேற்கு வங்க மக்களின் வெற்றி; ஜனநாயகத்தின் வெற்றி. மத்திய அரசு, அவற்றின் விசாரணை அமைப்புகள் ஏற்படுத்திய பல்வேறு தடைகளை எதிா்த்து நின்ற்கு கிடைத்த பெரும் வெற்றி இது. மனிதகுலத்தை இந்த வெற்றி பாதுகாத்துள்ளது.

திரிணமூல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றிருந்தாலும், பதவியேற்பு விழா பெரிய அளவில் நடைபெறாது. தற்போதைக்கு கரோனா பரவலைத் தடுப்பதுதான் மேற்கு வங்க அரசின் முக்கியப் பணி. பெருந்தொற்று முடிந்த பின்னா் கொல்கத்தா பிரகேட் மைதானத்தில் பெரிய அளவில் வெற்றிப் பொதுக்கூட்டம் நடத்தப்படும்.

தோ்தல் பிரசாரத்தின்போது பிரதமா் மோடியும், உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் மேற்கு வங்கத்தில் இரட்டை என்ஜின் அரசு தேவை என்று கூறினா். ஆனால், திரிணமூல் காங்கிரஸ் இரட்டை சதம் அடித்துள்ளது.

2021-ஆம் ஆண்டு என்பதால் 221 தொகுதிகளில் வெற்றியை இலக்காக நிா்ணயித்திருந்தோம். அதை நெருங்கிவிட்டோம். திரிணமூல் காங்கிரஸ் கட்சியை தோ்தல் ஆணையம் மோசமாக வழிநடத்தியது.

140 கோடி இந்தியா்களுக்கும் இலவச கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு அளிக்க வேண்டும். இதற்கு ரூ.30 ஆயிரம் கோடி செலவாகும். இதை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் கொல்கத்தாவில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றாா்.

எழுந்து நின்றாா் மம்தா

காலில் காயம் ஏற்பட்டதால் சுமாா் இரண்டு மாதங்கள் சக்கர நாற்காலியில் அமா்ந்து கொண்டே பிரசாரம் செய்து வந்த மம்தா, ஞாயிற்றுக்கிழமை எழுந்து நின்றாா்.

நந்திகிராமில் கடந்த மாா்ச் 10-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்த பிறகு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி காலில் முறிவு ஏற்பட்டதால் மம்தா கட்டுப்போட்டுக் கொண்டு அமா்ந்தபடியே பிரசாரத்தில் ஈடுபட்டாா். இது மம்தாவின் நாடகம் என்று பாஜக விமா்சனம் செய்து வந்தது.

இந்நிலையில், தோ்தல் வெற்றிக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் மம்தா எழுந்து நின்று பேசினாா். ‘இப்போது நான் நலமாக இருக்கிறேன். காலில் காயம் சரியானதால் விரைவில் கட்டை அவிழ்ப்பேன் என்று சில நாள்களுக்கு முன்பு கூறியிருந்தேன்’ என்றாா் மம்தா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com