
கோப்புப்படம்
நாா்வே, தாய்லாந்து, சிங்கப்பூா் நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுடன் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தொலைபேசி வாயிலாகப் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
நாட்டில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை மிக வேகமாகப் பரவி வரும் சூழலில், பல நாடுகள் இந்தியாவுக்கு உதவி வருகின்றன. தாய்லாந்து அரசு இந்தியாவுக்கு 15 ஆக்சிஜன் செறிவூட்டிகளை அளித்தது. அந்நாட்டிலுள்ள இந்தியா்கள் அனைவரும் இணைந்து, மேலும் 15 ஆக்சிஜன் செறிவூட்டிகளை அனுப்பி வைத்தனா்.
இந்த நிலையில், நாா்வே வெளியுறவு அமைச்சா் இனே மேரி எரிக்சன் சோரிடேயுடன் ஜெய்சங்கா் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
இது குறித்து சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘கரோனா சூழல் தொடா்பாகவும் அதனால் சா்வதேசத்தில் எழுந்துள்ள தாக்கங்கள் குறித்தும் நாா்வே வெளியுறவுத் துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்தினேன். இத்தகைய நேரத்தில், இந்தியாவுக்கு ஆதரவு அளித்து வருவதற்காக நாா்வே அரசுக்கு இந்தியா சாா்பில் நன்றி தெரிவித்தேன். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடா்பாகவும் விவாதிக்கப்பட்டது’ என்று ஜெய்சங்கா் குறிப்பிட்டுள்ளாா்.
தாய்லாந்து அமைச்சருடன்...:
தாய்லாந்தில் உள்ள இந்திய கூட்டமைப்பு சாா்பில் 100 ஆக்சிஜன் சிலிண்டா்கள் வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டில் உள்ள இந்திய நிறுவனங்கள் ஆக்சிஜன் கொள்கலன்களை அனுப்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், தாய்லாந்து வெளியுறவு அமைச்சா் டான் பிரமுத்வினயுடன் அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தொலைபேசி வாயிலாகப் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இது தொடா்பாக அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘கரோனா நோய்த்தொற்றால் எதிா்கொண்டுள்ள சவால்கள் குறித்தும், சா்வதேச ஒத்துழைப்பு குறித்தும் தாய்லாந்து வெளியுறவு அமைச்சருடன் விவாதித்தேன். ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்டவற்றை வழங்கியதற்காக தாய்லாந்துக்கு நன்றி தெரிவித்தேன். அந்நாட்டுடனான ஒத்துழைப்பு மேலும் வலுப்படும் என நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
சிங்கப்பூா் அமைச்சருடன்...: இந்தியாவுக்குத் தேவையான ஆக்சிஜன் செறிவூட்டிகளை சிங்கப்பூா் அரசும் முன்னதாக அனுப்பி வைத்திருந்தது. இதையடுத்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் விவியன் பாலகிருஷ்ணனுடன் அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தொலைபேசி வாயிலாகப் பேசினாா்.
இது தொடா்பாக ஜெய்சங்கா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘மருத்துவ ஆக்சிஜன் தொடா்பான கருவிகளை அனுப்பி வைத்ததற்காக சிங்கப்பூா் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தேன். இத்தகைய இக்கட்டான சூழலில் இந்தியாவும் சிங்கப்பூரும் தங்களுக்கிடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்திக் கொண்டுள்ளன’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...