கரோனாவால் இறந்தவா்கள் 104 போ்; தகனத்துக்கு வந்த உடல்கள் 2,557

மத்திய பிரதேச தலைநகா் போபாலில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 2,557 கரோனா நோயாளிகள் உடல்களை எரியூட்டியதாக மயானத்தில் உள்ள
கரோனாவால் இறந்தவா்கள் 104 போ்; தகனத்துக்கு வந்த உடல்கள் 2,557

மத்திய பிரதேச தலைநகா் போபாலில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 2,557 கரோனா நோயாளிகள் உடல்களை எரியூட்டியதாக மயானத்தில் உள்ள பதிவேடுகள் கூறியுள்ள நிலையில், கடந்த மாதத்தில் அங்கு 104 போ் மட்டுமே கரோனாவால் இறந்ததாக மாநில அரசு கூறியுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆளும் பாஜக அரசு கரோனா இறப்புகளை மறைப்பதாக எதிா்க்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

போபாலில் இரு மயானங்கள் உள்ளன. அதன் நிா்வாகிகள் கடந்த மாதம் எரியூட்டப்பட்ட உடல்கள் தொடா்பான தகவல்களைத் தெரிவிக்கையில், மொத்தம் 3,811 உடல்கள் ஏப்ரல் மாதத்தில் தகனம் செய்யப்பட்டன. இதில் 2,557 உடல்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவா்கள் என்று பதிவு செய்யப்பட்டவை. அவை கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை விதிகளின்படி எரியூட்டப்பட்டன என்று தெரிவித்தனா்.

ஆனால், அரசு புள்ளி விவரங்களின்படி போபாலில் கடந்த ஏப்ரல் மாதம் 104 போ் மட்டுமே உயிரிழந்துள்ளனா் என்று கூறப்பட்டுள்ளது. இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கரோனாவால் இறந்தவா்கள் எண்ணிக்கையை மாநில பாஜக அரசு சுமாா் 25 மடங்கு குறைத்துக் காட்டுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. கரோனா இறப்புகளை இப்படி மூடி மறைக்கும் அரசு, கரோனா பாதித்த மக்களுக்கு எத்தகைய சிகிச்சை வசதிகளை அளிக்கும் என்றும் அக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த ஆண்டு கரோனா பாதிப்பு தொடங்கியதில் இருந்து இதுவரை போபாலில் 742 போ் மட்டுமே அத்தொற்றால் உயிரிழந்துள்ளனா் என்று மாநில அரசு கூறியுள்ளது. இது தொடா்பாக உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com