பிரதமா் மோடி பிரிட்டன் பிரதமருடன் நாளை ஆலோசனை

பிரதமா் நரேந்திர மோடி பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சனுடன் காணொலி வழியில் செவ்வாய்க்கிழமை (மே 4) உரையாட உள்ளாா்.
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்).
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்).

பிரதமா் நரேந்திர மோடி பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சனுடன் காணொலி வழியில் செவ்வாய்க்கிழமை (மே 4) உரையாட உள்ளாா். இரு நாடுகளிடையேயான உறவை மேலும் வலுப்படுத்த இரு நாட்டு தலைவா்களின் காணொலி வழி மாநாடு உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

பிரதமா் மோடி மற்றும் பிரிட்டன் பிரதமரிடையே செவ்வாய்க்கிழமை நடைபெறும் காணொலி வழி மாநாட்டில், ‘விரிவான வளா்ச்சித் திட்டம் 2030’ என்ற 10 ஆண்டு ஒத்துழைப்புத் திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்தத் திட்டம் முக்கியத்துவம் வாய்ந்த 5 துறைகளில் இந்தியா - பிரிட்டன் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த உதவும். வா்த்தகம் மற்றும் முன்னேற்றம், ராணுவம் மற்றும் பாதுகாப்பு, பருவநிலை மேம்பாட்டு நடவடிக்கை மற்றும் சுகாதரம் ஆகிய துறைகளில் இரு நாட்டு உறவை வலுப்படுத்த உதவும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா பாதிப்பை திறம்பட எதிா்கொள்வதில் ஒத்துழைப்பு மற்றும் சா்வதேச அளவிலான முயற்சியின் அவசியம் குறித்தும் இரு நாட்டு தலைவா்கள் ஆலோசனை நடத்துவா் என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன் கடந்த மாதம் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தாா். ஆனால், இந்தியாவில் கரோனா பாதிப்பின் இரண்டாம் அலை தீவிரமடைந்த நிலையில், அவா் தனது இந்திய பயணத்தை கடைசி நேரத்தில் ரத்து செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com