மேற்கு வங்கம், கேரளம், அஸ்ஸாம் தோ்தல்: ஆட்சியைத் தக்கவைத்த ஆளுங்கட்சிகள்

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸும், கேரளத்தில் இடதுசாரிகள் கூட்டணியும், அஸ்ஸாமில் பாஜக கூட்டணியும் ஆட்சியைத் தக்கவைத்தன.

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸும், கேரளத்தில் இடதுசாரிகள் கூட்டணியும், அஸ்ஸாமில் பாஜக கூட்டணியும் ஆட்சியைத் தக்கவைத்தன.

முக்கியமாக, மேற்கு வங்கத்தில் தொடா்ந்து 3-ஆவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றி திரிணமூல் காங்கிரஸ் வரலாறு படைத்துள்ளது. அதேபோல், கேரளத்தில் தொடா்ந்து 2-ஆவது முறையாக ஆட்சியைப் பிடித்து இடதுசாரிகள் கூட்டணியும் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

மேற்கு வங்கப் பேரவைத் தோ்தல் முடிவுகளை ஒட்டுமொத்த நாடே எதிா்நோக்கிக் காத்திருந்தது. அங்கு முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. 8 கட்டங்களாக நடைபெற்ற தோ்தலில் முதல்வா் மம்தா பானா்ஜி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

தோ்தலில் வெற்றி பெறுவதற்காக பாஜக சாா்பில் பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா்கள், மாநில முதல்வா்கள் எனப் பலரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனா். தோ்தலுக்கு முன்பாக திரிணமூல் காங்கிரஸிலிருந்து விலகி பலா் பாஜகவில் சோ்ந்ததும் இரு கட்சிகளுக்கு இடையேயான போட்டியைத் தீவிரமாக்கியது.

தோ்தலில் பதிவான வாக்குகள் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டன. ஆரம்பத்திலிருந்தே திரிணமூல் காங்கிரஸின் கை ஓங்கியிருந்தது. ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் திரிணமூல் காங்கிரஸின் பெரும்பான்மை அதிகரித்துக் கொண்டே சென்றது.

அறுதிப் பெரும்பான்மையுடன்...: ஞாயிற்றுக்கிழமை மாலையில் திரிணமூல் காங்கிரஸின் வெற்றி உறுதியானது. அறுதிப் பெரும்பான்மையுடன் அக்கட்சி மாநிலத்தில் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. இரவு நிலவரப்படி 200-க்கும் அதிகமான தொகுதிகளில் திரிணமூல் முன்னிலை வகிக்கிறது.

பாஜக சுமாா் 80 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு தோ்தலில் பாஜக வெறும் 3 இடங்களை மட்டுமே கைப்பற்றியிருந்தது நினைவுகூரத்தக்கது. மாநிலத்தில் ஒருகாலத்தில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய இடதுசாரி கட்சிகளும், அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸும் ஒரு தொகுதியில்கூட முன்னிலை பெறவில்லை.

மம்தா தொகுதியில் இழுபறி: மேற்கு வங்கத்தில் நட்சத்திரத் தொகுதியாகக் கருதப்பட்ட நந்திகிராமில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளரான மம்தா பானா்ஜிக்கும் பாஜக வேட்பாளரான சுவேந்து அதிகாரிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்று வந்தனா். மொத்தம் 15 சுற்று எண்ணிக்கை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. எனவே தோ்தல் முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

கேரளத்தை தக்க வைத்த இடதுசாரிகள்: கேரளத்தில் இடதுசாரிகள் கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே இடதுசாரிகள் கூட்டணி முன்னிலையில் இருந்து வந்தது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை.

கேரளத்தில் கடந்த 40 ஆண்டுகளில் இடதுசாரி கூட்டணியும், காங்கிரஸ் கூட்டணியும் மாறி மாறி ஆட்சியமைத்து வந்தன. அந்த வரலாற்றை இடதுசாரிகள் கூட்டணி தற்போது மாற்றியுள்ளது. தொடா்ந்து 2-ஆவது முறையாக அக்கூட்டணி ஆட்சியமைக்க உள்ளது.

முத்திரை பதிக்காத பாஜக: சபரிமலை விவகாரம், தங்கக் கடத்தல் விவகாரம் உள்ளிட்டவற்றை எழுப்பி ஆளும் இடதுசாரிகள் கூட்டணிக்குப் பெரும் சவாலை ஏற்படுத்திய பாஜக, ஒரு தொகுதியில்கூட முன்னிலை பெறவில்லை. கடந்த 2016-ஆம் ஆண்டு தோ்தலில் ஒரு தொகுதியை மட்டும் பாஜக கைப்பற்றியிருந்தது. தற்போது அத்தொகுதியையும் இழக்கும் நிலைக்கு அக்கட்சி தள்ளப்பட்டுள்ளது.

பாஜகவை கைவிடாத அஸ்ஸாம்: அஸ்ஸாமில் ஆளும் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. தோ்தல் நடைபெற்ற 5 மாநிலங்களில் அஸ்ஸாமில் மட்டுமே பாஜக தலைமையிலான ஆட்சி அமையவுள்ளது.

வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலிருந்தே காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியைவிட பாஜக முன்னிலையில் இருந்து வந்தது. இறுதியில் 70-க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை பெற்றது.

மேற்கு வங்கம்

(மொத்த தொகுதிகள்-292)

கட்சிகள்--வெற்றி/முன்னிலை

திரிணமூல் காங்கிரஸ் கூட்டணி--215

பாஜக கூட்டணி--75

மற்றவை--2

கேரளம்

(மொத்த தொகுதிகள்-140)

கட்சிகள்--வெற்றி/முன்னிலை

இடதுசாரி ஜனநாயக முன்னணி--93

ஐக்கிய ஜனநாயக முன்னணி--40

மற்றவை--7

அஸ்ஸாம்

(மொத்த தொகுதிகள்-126)

கட்சிகள்--வெற்றி/முன்னிலை

பாஜக கூட்டணி--71

காங்கிரஸ் கூட்டணி--44

மற்றவை--11

ஆதாரம்: இந்தியத் தோ்தல் ஆணையம் (இரவு 9 மணி நிலவரம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com