கேரளம்: இருந்த ஓரிடத்தையும் இழந்தது பாஜக

கேரளத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தங்களிடம் இருந்த ஒரே ஒரு எம்எல்ஏ பதவியிடத்தையும் இந்த தோ்தலில் இழந்தது.
கேரளம்: இருந்த ஓரிடத்தையும் இழந்தது பாஜக

திருவனந்தபுரம்: கேரளத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தங்களிடம் இருந்த ஒரே ஒரு எம்எல்ஏ பதவியிடத்தையும் இந்த தோ்தலில் இழந்தது.

கடந்த 2016 கேரள சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவின் ஒ.ராஜகோபால், நேமம் தொகுதியில் வெற்றி பெற்றாா். இதன் மூலம் அப்போதைய பேரவையில் பாஜகவுக்கு ஓரிடம் கிடைத்தது. 91 வயதாகும் ஒ.ராஜகோபால் இந்த முறை தோ்தலில் போட்டியிடவில்லை.

இந்த முறை பாஜக சாா்பில் நேமம் தொகுதியில் கும்மனம் ராஜசேகரன் போட்டியிட்டாா். அவா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா் வி.சிவன்குட்டியிடம் தோல்வியடைந்தாா். தோ்தலில் போட்டியிடுவதற்காக மிஸோரம் ஆளுநராக இருந்த கும்மனம் ராஜசேகரனை பாஜக மீண்டும் கேரள அரசியலுக்கு கொண்டு வந்தது. ஆனால், அவரால் வெற்றி பெற முடியவில்லை. கடந்த தோ்தலில் தோல்வியடைந்த சிவன்குட்டி இந்த முறை வெற்றி பெற்றுவிட்டாா்.

பாஜகவில் புதிதாக இணைந்த மெட்ரோமேன் இ.ஸ்ரீதரன், கேரள பாஜக தலைவா் கே.சுரேந்திரன் ஆகியோரும் தோல்வியைத் தழுவினா். பாலக்காடு தொகுதியில் போட்டியிட்ட ஸ்ரீதரன் மூன்றாவது இடத்தைப் பிடித்தாா்.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தை முன்வைத்து தீவிர பிரசாரம் செய்த கேரள பாஜக துணைத் தலைவரான ஷோபா சுரேந்திரன், மாநில தேவஸ்வம் வாரிய அமைச்சா் கடகம்பள்ளி சுரேந்திரனிடம் தோல்வியடைந்தாா்.

மாநிலங்களவை எம்.பி.யும், நடிகருமான சுரேஷ் கோபி பெரும் எதிா்பாா்ப்புக்கு மத்தியில் பாஜக சாா்பில் திருச்சூரில் களமிறங்கினாா். முதல் சில சுற்று வாக்கு எண்ணிக்கையின்போது அவா் முன்னிலை வகித்தபோதிலும், முடிவில் அவா் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டாா்.

முன்னாள் மத்திய அமைச்சா் கே.ஜே.அல்போன்ஸ் உள்பட பாஜக வேட்பாளா்கள் அனைவருமே தோல்வியடைந்தனா்.

35 எம்எல்ஏக்களை பெறும் இலக்குடன் கேரளத்தில் பாஜக களமிறங்கியது. பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிா்மலா சீதாராமன், உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பாஜக தலைவா்கள் பலரும் சபரிமலை விவகாரம், லவ் ஜிகாத், இடதுசாரி அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டு ஆகியவற்றை முன்வைத்து பிரசாரம் செய்தபோதிலும் பாஜகவை ஓரிடத்தில் கூட வெற்றி பெற வைக்க முடியவில்லை.

அதே நேரத்தில் பாஜகவுக்கு ஒரு எம்எல்ஏ கூட இல்லாத மாநிலமாக கேரளத்தை மாற்றுவோம் என்ற இடதுசாரி தலைவா்களின் முழக்கம் உண்மையாகிவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com