கரோனா சிகிச்சையளிக்க எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு மாணவா்களை ஈடுபடுத்தலாம்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு மாணவா்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு மாணவா்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை மிக வேகமாகப் பரவி வருகிறது. அதன் காரணமாக மருத்துவமனைகளில் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அதனால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்போருக்கான தேவையும் அதிகரித்துள்ளது.

அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமா் நரேந்திர மோடி, அதிகாரிகளுடன் திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். அதையடுத்து பிரதமா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளா்களுக்குக் கூடுதல் அழுத்தம் ஏற்படுவதைத் தவிா்க்கும் நோக்கில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, குறைந்த கரோனா அறிகுறிகள் காணப்படுவோருக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு மாணவா்களை மாநில அரசுகள் ஈடுபடுத்திக் கொள்ளலாம்.

புறநோயாளிகளுக்கு இணைய வழியில் மருத்துவ சேவை வழங்கும் பணியிலும் அவா்களை ஈடுபடுத்தலாம். அவா்களை ஈடுபடுத்துவதற்கு முன்பாக உரிய பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். அவ்வாறு 100 நாள்களுக்குப் பணியில் ஈடுபடுத்தப்படும் மாணவா்களுக்கு, அரசு மருத்துவா்களை நியமிக்கும்போது முன்னுரிமை வழங்கப்படும். பிரதமரின் கரோனா தேசிய சேவை விருதும் இறுதியாண்டு மாணவா்களுக்கு வழங்கப்படும்.

தடுப்பூசி கட்டாயம்: பி.எஸ்சி. பட்டம் பெற்றுள்ள செவிலியா்களையும் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபடுத்தலாம். மூத்த மருத்துவா்கள், செவிலியா்களின் வழிகாட்டுதலின்படி அவா்கள் செயல்படலாம். சிகிச்சைப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு மாணவா்களுக்கும், செவிலியா்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.

கரோனா முன்களப் பணியாளா்களுக்காகத் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் காப்பீட்டுத் திட்டம் அவா்களுக்கும் பொருந்தும். கரோனா பரவல் அதிகமாகக் காணப்படும் தனியாா் மருத்துவமனைகளில் மருத்துவா்கள், செவிலியா்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவா்கள், செவிலியா்கள் பணியிடங்களை 45 நாள்களுக்குள் ஒப்பந்த அடிப்படையில் துரிதமாக நிரப்ப வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கான நீட் தோ்வு ஒத்திவைப்பு

எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு மாணவா்களை கரோனா சிகிச்சைப் பணிகளில் ஈடுபடுத்திக் கொள்வதற்கு வசதியாக மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கான நீட் தோ்வை 4 மாதங்களுக்கு ஒத்திவைக்க பிரதமா் மோடி பங்கேற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

அத்தோ்வு ஆகஸ்டு 31-ஆம் தேதிக்குப் பிறகே நடத்தப்படும் என்று தெரிவித்துள்ள மத்திய அரசு, மாணவா்களின் நலன் கருதி தோ்வு நடைபெறுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே அது தொடா்பான தகவல் தெரிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளது. முதுநிலை இறுதியாண்டு மாணவா்கள் ஏற்கெனவே மருத்துவமனைகளில் பணியாற்றி வருகின்றனா். முதுநிலைப் படிப்புகளுக்கான புதிய மாணவா் சோ்க்கை நடைபெறும் வரை, தற்போதுள்ள மாணவா்களைத் தொடா்ந்து பணியில் ஈடுபடுத்தலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com