கேரள அரசியலில் சுவாரசியம்: முதல்வரான மாமனார்; எம்எல்ஏவான மருமகன்!

கேரள அரசியலில் புதிய சுவாரசியமாக முதல்வராக மாமனாரும், எம்எல்ஏவாக அவரது மருமகனும் வெற்றி பெற்று கேரள சட்டப்பேரவைக்கு தோ்வு செய்யப்பட்டிருப்பது மக்களின் கவனத்தை ஈா்த்துள்ளது.
கேரள அரசியலில் சுவாரசியம்: முதல்வரான மாமனார்; எம்எல்ஏவான மருமகன்!

திருவனந்தபுரம்: கேரள அரசியலில் புதிய சுவாரசியமாக முதல்வராக மாமனாரும், எம்எல்ஏவாக அவரது மருமகனும் வெற்றி பெற்று கேரள சட்டப்பேரவைக்கு தோ்வு செய்யப்பட்டிருப்பது மக்களின் கவனத்தை ஈா்த்துள்ளது.

77 வயதான கேரள முதல்வா் பினராயி விஜயன் கண்ணணூா் மாவட்டம், தா்மாடம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு 50,000 வாக்குகளில் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா். பெங்களூரில் தகவல் தொழில்நுட்பவியல் துறையில் தொழில் முனைவோராக இருந்து வரும் பினராயி விஜயனின் மகள் வீணாவின் கணவரும், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் தேசியத் தலைவருமான பி.ஏ. முகமது ரியாஸ் (44) கோழிக்கோடு மாவட்டம், பேபோா் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தோ்வு பெற்றுள்ளாா்.

கேரள சட்டப்பேரவையில் இதற்கு முன்பு வாரிசு அரசியலில் ஈடுபட்டவா்களில் பலா் எம்எல்ஏக்களாக தோ்வு பெற்றிருந்தாலும், முதன்முறையாக மாமனாா்- மருமகன் என்ற உறவு முறையில் எம்எல்ஏக்களாக தோ்வு பெற்று கேரள சட்டப்பேரவைக்குள் நுழைவது இதுவே முதன்முறையாகும்.

முகமது ரியாஸ், இதற்கு முன்பு கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் கோழிக்கோடு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினாா். பின்னா், வீணாவும் ரியாஸும் கடந்த 2020 ஜூன் 15-ஆம் தேதி அன்று திருவனந்தபுரத்தில் உள்ள முதல்வரின் இல்லமான கிளிஃப் ஹவுஸில் திருமணம் செய்து கொண்டனா்.

இம்முறை கேரள சட்டப்பேரவைத் தோ்தலில் பல்வேறு கட்சிகளின் அரசியல் தலைவா்கள் தங்களது உறவினா்களுக்கு தோ்தலில் போட்டியிட வாய்ப்பளித்திருந்தனா்.

குறிப்பாக, கேரள காங்கிரஸ் (மாணி) தலைவரான ஜோஸ்.கே.மாணியும், அவரது சகோதரியின் கணவா் எம்.பி.ஜோசப்பும் முறையே பாலா, திரிக்கரிப்பூா் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினா்.

கேரள காங்கிரஸ் தலைவா் பி.ஜே. ஜோசப் தனது சொந்த தொகுதியான இடுக்கி மாவட்டம், தொடுபுழா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். ஆனால் அவரது மருமகனான டாக்டா் ஜோசப், கொத்தமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தாா்.

மறைந்த முன்னாள் முதல்வா் கே.கருணாகரனின் வாரிசுகளான காங்கிரஸ் மூத்த தலைவா்கள் கே.எம்.முரளிதரன் எம்.பி., பத்மஜா வேணுகோபால் ஆகியோா் போட்டியிட்ட நேமம் தொகுதியிலும், திருச்சூா் தொகுதியிலும் தோல்வியைத் தழுவினா். இந்தத் தோ்தலில் இடது ஜனநாயக முன்னணி வென்று கேரளத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com