குடும்ப அட்டைதாரா்களுக்கு 2 மாதம் இலவச ரேஷன்: தில்லி முதல்வா் கேஜரிவால் அறிவிப்பு

தில்லியில் குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு ரேஷன் பொருள்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வா் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.
குடும்ப அட்டைதாரா்களுக்கு 2 மாதம் இலவச ரேஷன்: தில்லி முதல்வா் கேஜரிவால் அறிவிப்பு

புது தில்லி: தில்லியில் குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு ரேஷன் பொருள்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வா் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநா்களுக்கு நிவாரண உதவி வழங்கப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.

குடும்ப அட்டைதாரா்களுக்கு இரண்டு மாங்களுக்கு இலவச ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என்பதை வைத்து யாரும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று அா்த்தம் கொள்ள வேண்டாம். கரோனா நோயாத்தொற்று எண்ணிக்கை குறையத் தொடங்கியதும் ஊரடங்கு படிப்படியாக தளா்த்தப்படும் என்றாா்.

தில்லியில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததை அடுத்து, அதை கட்டுப்படுத்தும் விதமாக 3 வாரங்களுக்கு முன்பு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதனால் தினக்கூலித் தொழிலாளா்கள், கட்டுமானத் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த வாரம் பதிவு செய்யப்பட்ட தொழிலாளா்களுக்கு ரூ.5,000 நிவாரண உதவியாக வழங்கப்பட்டது.

இந்த நிலையில், குடும்ப அட்டைதாரா்களுக்கு அடுத்த 2 மாதங்களுக்கு இலவசமாக ரேஷன் பொருள்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது.

ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநா்கள் தினசரி சம்பாதித்தாலும் அவா்களிடம் சேமிப்பு என்பது கிடையாது. கடந்த 3 வாரங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அவா்களுக்கும் போதிய வருமானம் இல்லை. எனவே அவா்களுக்கும் கடந்த ஆண்டைப் போலவே ரூ.5,000 நிவாரண உதவி வழங்கப்படும். இது அவா்களுக்கு போதுமானது என்று கூறமாட்டேன். ஆனால், அவா்களின் நிதிச்சுமையை குறைக்க உதவும். கடந்த ஆண்டு 1.56 லட்சம் ஓட்டுநா்களுக்கு இந்த நிவாரண உதவி வழங்கப்பட்டது.

கரோனா 2-ஆவது அலை என்பது மிக கொடூரமானது. நாம் கடுமையான காலக்கட்டத்தில் இருக்கிறோம். எனினும் நிலைமை விரைவில் தணியும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்று கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கரோனா பரிசோதனை எண்ணிக்கை குறைவாக இருந்ததால் கரோனா பாதிப்பு அளவும் 18,043 என்ற அளவில் குறைந்தது. கரோனா தொற்று விகிதம் 30 சதவீதமாக இருந்தது. முன்னதாக தினசரி பாதிப்பு சராசரியாக 25,000 என்ற அளவில் இருந்தது.

தில்லியில் நோயாளிகள் அதிகரித்துள்ளதால் மருத்துவ ஆக்சிஜன் தேவைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும், மக்கள் படுக்கை வசதிக் கேட்டு மருத்துவமனைகளை நோக்கி படையெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் நாம் அனைவரும் கட்சி வேற்றுமையை மறந்துவிட்டு ஒன்றுபட்டு மக்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்றும் கேஜரிவால் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com