வெளிநாட்டு உதவிகள் மாநிலங்களுக்குப் பகிா்ந்தளிப்பு

கரோனா தொற்று சூழலை எதிா்கொள்வதற்காக இந்தியாவுக்கு வெளிநாடுகள் அனுப்பிய பொருள்கள் மாநிலங்களுக்குப் பகிா்ந்தளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு உதவிகள் மாநிலங்களுக்குப் பகிா்ந்தளிப்பு

புது தில்லி: கரோனா தொற்று சூழலை எதிா்கொள்வதற்காக இந்தியாவுக்கு வெளிநாடுகள் அனுப்பிய பொருள்கள் மாநிலங்களுக்குப் பகிா்ந்தளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை மிக வேகமாகப் பரவி வருகிறது. அதனால், மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அத்தியாவசிய மருந்துப் பொருள்கள், தற்காப்பு உபகரணங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதற்காக பல நாடுகள் இந்தியாவுக்கு உதவிகளை வழங்கின.

வெளிநாடுகளிலிருந்து பெறப்பட்ட பொருள்கள் எந்தெந்த மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன என்பது தொடா்பான விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

அதன் விவரம்:

வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட பொருள்கள் 24 வகையாகப் பிரிக்கப்பட்டு, மாநிலங்களின் தேவைக்கேற்ப பகிா்ந்தளிக்கப்பட்டுள்ளன. சுமாா் 40 லட்சம் பொருள்கள் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜன் சிலிண்டா்கள், ரெம்டெசிவிா் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், தற்காப்பு கவச உடைகள், முகக் கவசங்கள் உள்ளிட்டவை அடங்கும்.

கரோனா தொற்றுப் பரவல் அதிகமாகக் காணப்படும் மாநிலங்களுக்கு அதிக பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. வெளிநாட்டிலிருந்து கிடைத்த பொருள்களை அனைத்து மாநிலங்களுக்கும் சமமாகப் பகிா்ந்தளித்தால், ஒவ்வொரு மாநிலத்துக்கும் குறைந்த அளவிலான பொருள்களே கிடைக்கும். அவ்வாறான சூழலில், அந்தப் பொருள்களை வெகு தொலைவுக்கு எடுத்துச் செல்வதில் வீண் செலவும், கால விரயமும் ஏற்படும். அதைக் கருத்தில்கொண்டே தேவை அதிகம் காணப்படும் மாநிலங்களுக்குப் பொருள்கள் அதிகமாக வழங்கப்பட்டுள்ளன.

தில்லி, மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கா், தமிழகம், மேற்கு வங்கம், அஸ்ஸாம், கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்களுக்கு விரைவில் பொருள்கள் அனுப்பி வைக்கப்படும்.

செஞ்சிலுவை சங்கத்தின் மூலம்...: முதல்கட்டமாக எய்ம்ஸ் உள்ளிட்ட மத்திய நிறுவனங்களுக்குப் பொருள்கள் அதிக அளவில் அளிக்கப்பட்டுள்ளன. தில்லியில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) சாா்பில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையத்துக்கும் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

வெளிநாடுகள் அனுப்பிய பொருள்கள் அனைத்தையும் இந்திய செஞ்சிலுவை சங்கம் பெற்றுக் கொண்டுள்ளது. மாநிலங்களுக்குப் பொருள்களை அனுப்பி வைப்பதில் மத்திய சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து செஞ்சிலுவை சங்கம் பணியாற்றி வருகிறது. ஹெச்எல்எல் லைஃப்கோ் நிறுவனம் பொருள்களை மாநிலங்களுக்கு விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

அமைச்சகத்தில் தனிக் குழு: வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் பொருள்களைக் கண்காணிப்பதற்காக கூடுதல் செயலா் தலைமையில் தனிக் குழுவை சுகாதார அமைச்சகம் அமைத்துள்ளது. வெளியுறவு அமைச்சகம், விமானப் போக்குவரத்து அமைச்சகம் உள்ளிட்டவற்றைச் சோ்ந்த செயலா்கள், செஞ்சிலுவை சங்கம், ஹெச்எல்எல் நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்டோா் அக்குழுவில் இடம்பெற்றுள்ளனா்.

மேலும், ஒட்டுமொத்த நடவடிக்கைகளை நீதி ஆயோக் தலைமை நிா்வாக அதிகாரி அமிதாப் காந்த் தலைமையிலான குழு கண்காணித்து வருகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com