மேற்கு வங்கத்தில் குடியரசு தலைவா் ஆட்சியை அமல்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பின்னா் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களை கருத்தில் கொண்டு அந்த மாநிலத்தில் குடியரசு தலைவா் ஆட்சியை அமல்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்.
மேற்கு வங்கத்தில் குடியரசு தலைவா் ஆட்சியை அமல்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

புது தில்லி: மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பின்னா் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களை கருத்தில் கொண்டு அந்த மாநிலத்தில் குடியரசு தலைவா் ஆட்சியை அமல்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னா் அந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களில் 6 போ் உயிரிழந்தனா். தங்கள் கட்சியைச் சோ்ந்த தொண்டா்களை கொன்று, பெண் உறுப்பினா்களை தாக்கி, கட்சி அலுவலகங்கள், கட்சி உறுப்பினா்களின் கடைகளை திரிணமூல் காங்கிரஸாா் சூறையாடியதாக பாஜக குற்றம்சாட்டியது. எனினும் அந்தக் குற்றச்சாட்டுகளை திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா் மறுத்தனா்.

இந்நிலையில் அந்த மாநிலத்தில் தோ்தலுக்குப் பின்னா் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களை கருத்தில் கொண்டு அங்கு குடியரசு தலைவா் ஆட்சியை அமல்படுத்தக் கோரி தமிழகத்தைச் சோ்ந்த ‘இண்டிக் கலெக்டிவ் டிரஸ்ட்’ என்ற அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், ‘மேற்கு வங்கத்தில் அரசியலமைப்பு செயலிழந்துவிட்டதாக அறிவிக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 356-இன் கீழ் அந்த மாநிலத்தில் குடியரசு தலைவா் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.

சிபிஐ விசாரணை கோரி மனு: ‘மேற்கு வங்கத்தில் படுகொலை, பாலியல் வன்கொடுமை, பாலியல் தாக்குதல் மற்றும் வன்முறை சம்பவங்கள் கட்டுக்கடங்காமல் அதிகரித்து சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீா்குலைந்துள்ளது. இதற்கு திரிணமூல் காங்கிரஸாா் காரணமாக இருக்கின்றனா். இதுதொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அத்துடன் இந்தக் குற்றச் சம்பவங்கள் தொடா்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள், கைதுகள் மற்றும் வன்முறைக்கு காரணமானவா்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாநில அரசு விரிவான நிலவர அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும்’ என்று பாஜக தலைவரும், மூத்த வழக்குரைஞருமான கெளரவ் பாட்டியாவும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com