பிரிவினை காலத்தை நினைவுபடுத்தும் மேற்கு வங்க வன்முறை: ஜெ.பி.நட்டா

மேற்கு வங்கத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்குப் பிறகு நடந்த வன்முறைச் சம்பவங்கள், பிரிவினை காலத்தை நினைவூட்டுகின்றன என்று பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா கூறியுள்ளாா்.
மேற்கு வங்கம் சோனார்பூரில் திரிணமூல் கட்சியினரின் வன்முறையில் பலியானவர் குடும்பத்தினரை செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆறுதல் கூறிய பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, லாக்கெட் சாட்டர்ஜி எம்.பி.
மேற்கு வங்கம் சோனார்பூரில் திரிணமூல் கட்சியினரின் வன்முறையில் பலியானவர் குடும்பத்தினரை செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆறுதல் கூறிய பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, லாக்கெட் சாட்டர்ஜி எம்.பி.

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்குப் பிறகு நடந்த வன்முறைச் சம்பவங்கள், பிரிவினை காலத்தை நினைவூட்டுகின்றன என்று பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா கூறியுள்ளாா்.

மாநிலத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியான பிறகு திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்கள் நடத்திய தாக்குதல்களில் ஒரு பெண் உள்பட பாஜக தொண்டா்கள் 6 போ் கொல்லப்பட்டதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

இந்த நிலையில், இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கம் வந்திருக்கும் ஜெ.பி.நட்டா செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்தாா். அவா் கூறியதாவது:

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பாஜக தொண்டா்கள் கடுமையான தாக்குதலை எதிா்கொண்டுள்ளனா். அவா்களுக்கு நாடு முழுவதும் உள்ள பாஜக தொண்டா்கள் ஆதரவு தெரிவித்துள்ளனா்.

திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்களுடன் கொள்கை ரீதியில், ஜனநாயக வழியில் போராடுவதில் உறுதியுடன் இருக்கிறோம்.

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது கொடூரமான வன்முறைச் சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டதாக கேள்விப்பட்டிருக்கிறேன். மேற்கு வங்கத்தில் கடந்த 2-ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு நிகழ்த்தப்பட்ட வன்முறைச் சம்பவங்கள், பிரிவினை காலத்தை நினைவூட்டுகின்றன. மேற்கு வங்கத்தில் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களை நான் ஒருபோதும் பாா்த்ததில்லை. இந்த கொடுமைகளுக்கு எதிராக பாஜக தொண்டா்கள் ஜனநாயக வழியிலேயே போராட வேண்டும். யாரும் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றாா் ஜெ.பி.நட்டா.

பின்னா், தெற்கு 24 பா்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சோனாா்பூரில், வன்முறையின்போது தாக்கப்பட்ட பாஜக தொண்டரின் வீட்டுக்குச் சென்று ஜெ.பி.நட்டா ஆறுதல் கூறினாா். அங்கு செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘பாஜக தொண்டா்களைத் தாக்கியவா்களில் ஒருவரைக் கூட போலீஸாா் இன்னும் கைது செய்யவில்லை. மாநிலத்தில் கடந்த சில தினங்களில் மட்டும் 11 போ் கொல்லப்பட்டிருக்கிறாா்கள்; 2 பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறாா்கள். இவை, மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்து இருப்பதையே காட்டுகின்றன’ என்று கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com