ம.பி.யில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வேலை நிறுத்தம்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள 6 அரசு மருத்துவமனைகளில் உள்ள இளம் மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 
ம.பி.யில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வேலை நிறுத்தம்

கரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட சக ஊழியர்களுக்கு சிறந்த சிகிச்சை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக மத்தியப் பிரதேசத்தில் உள்ள 6 அரசு மருத்துவமனைகளில் உள்ள இளம் மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 

கரோனா வார்டுகளில் பணியாற்றும் ஜூனியர் மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவில்லை. ஆனால் கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் அவர்களும் சேருவார்கள் என்று சங்கம் எச்சரித்துள்ளது.

சுமார் 3000 இளம் மருத்துவர்களில் 15 முதல் 20 சதவீதம் பேர் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க நியமிக்கப்பட்டுள்ளனர். கோரிக்கைகள் நிறைவேற்ற மாநில அரசு எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்காவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று இளம் மருத்துவர் சங்கத்தின் தலைவர் டாக்டர் அரவிந்த் மீனா தெரிவித்தார். 

தொற்றுநோய்கள் அதிகரித்துள்ள இந்த நிலையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட விரும்பவில்லை, ஆனால் வேறு வழியில்லை என்று அவர் கூறினார்.

கடந்த 6 மாதங்களாக நாங்கள் எங்கள் பிரச்னைகள் குறித்து மாநில அரசின் கவனத்தை ஈர்த்து வருகிறோம். மே 3ம் தேதி அமைச்சர் விஸ்வாஸ் சாரங்கிடமிருந்து எங்களுக்கு உத்தரவாதம் கிடைத்தது. ஆனால் அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை,

இளம் மருத்துவர்களில் 25 சதவீதம் பேர் இன்று வரை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மருத்துவர்களுக்கு படுக்கை ஒதுக்கீடு செய்ய உத்தரவாதம் கோருகிறோம் என்று மீனா கூறினார்.

மேலும், மாநில அரசு இளைய மருத்துவர்களுக்கு கட்டணமில்லா முறையில் சிகிச்சையளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக இளம் மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com