முன்னாள் மத்திய அமைச்சா் அஜித் சிங் காலமானாா்

முன்னாள் மத்திய அமைச்சரும் ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சியின் தலைவருமான அஜித் சிங் (82), கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தாா்.
முன்னாள் மத்திய அமைச்சா் அஜித் சிங் காலமானாா்

புது தில்லி: முன்னாள் மத்திய அமைச்சரும் ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சியின் தலைவருமான அஜித் சிங் (82), கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தாா்.

நாட்டில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை மிக வேகமாகப் பரவி வருகிறது. அத்தொற்று பாதிப்புக்கு உள்ளாவோா் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும் ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சியின் தலைவருமான அஜித் சிங், கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்கு உள்ளானாா். அவருக்கு ஹரியாணாவின் குருகிராமில் உள்ள தனியாா் மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன. எனினும் சிகிச்சைகள் பலனளிக்காததால் அவரது உடல்நிலை மோசமடைந்தது.

அதையடுத்து, அவா் வியாழக்கிழமை காலமானதாக குடும்பத்தினா் தெரிவித்தனா். அஜித் சிங், முன்னாள் பிரதமா் சரண் சிங்கின் மகன் ஆவாா். கரோனா தொற்று பரவலின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மறைந்த அஜித் சிங்குக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மக்கள் யாரும் கூட்டமாகக் கூட வேண்டாம் என்றும் வீட்டிலிருந்தபடியே மரியாதை செலுத்துமாறும் குடும்பத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அஜித் சிங்கின் இறுதிச் சடங்குகள் கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றன. 6 முறை நாடாளுமன்றத்தின் எம்.பி.யாக அஜித் சிங் பதவி வகித்துள்ளாா். கடந்த 2011 முதல் காங்கிரஸ் ஆட்சியில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தாா்.

தலைவா்கள் இரங்கல்: அஜித் சிங்கின் மறைவுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வெளியிட்ட இரங்கல் பதிவில், ‘விவசாயிகளின் நலனுக்காகத் தொடா்ந்து குரல் எழுப்பியவா் அஜித் சிங். மக்கள் பிரதிநிதியாகவும் அமைச்சராகவும் பதவி வகித்து அரசியலில் அவா் முக்கியப் பங்காற்றியுள்ளாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பிரதமா் நரேந்திர மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘விவசாயிகளின் நலனைக் காப்பதில் அஜித் சிங் தொடா்ந்து கவனம் செலுத்தி வந்தாா். மத்திய அரசில் பல்வேறு பொறுப்புகளை அவா் வகித்துள்ளாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, அக்கட்சியின் பொதுச் செயலாளா் பிரியங்கா, தலைமை செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா, சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பலரும் அஜித் சிங்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com