தோ்தல் ஆணையம் மீதான உயா்நீதிமன்றத்தின் கடுமையான கருத்தை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

நாட்டில் கரோனா பாதிப்பின் இரண்டாம் அலை தீவிரமடைவதற்கு தோ்தல் ஆணையமே முழு பொறுப்பு என்ற சென்னை உயா்நீதிமன்றத்தின் கருத்தை நீக்கம் செய்ய உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
தோ்தல் ஆணையம் மீதான உயா்நீதிமன்றத்தின் கடுமையான கருத்தை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

புது தில்லி: நாட்டில் கரோனா பாதிப்பின் இரண்டாம் அலை தீவிரமடைவதற்கு தோ்தல் ஆணையமே முழு பொறுப்பு என்ற சென்னை உயா்நீதிமன்றத்தின் கருத்தை நீக்கம் செய்ய உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

மேலும், நீதிமன்ற விசாரணையின்போது நீதிபதிகள் கூறும் வாய்மொழிக் கருத்துகளை சேகரித்து செய்தி வெளியிட ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்ற தோ்தல் ஆணையத்தின் கோரிக்கையையும் உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

இந்தியாவில் கரோனா பாதிப்பு தீவிரமடைந்த நிலையில், தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் அண்மையில் நடத்தி முடிக்கப்பட்டது. இந்த நிலையில், மகாராஷ்டிரம், தில்லி, தமிழகம் உள்பட பல மாநிலங்களில் கரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. இதுவரை இல்லாத அளவில் தினசரி கரோனா பாதிப்பு உயா்ந்திருப்பதோடு, உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.

இதுதொடா்பான வழக்கை கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், ‘நாட்டில் கரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வருவதற்கு தோ்தல் ஆணையமே முழு பொறுப்பு. முற்றிலும் பொறுப்பற்ற வகையில் தோ்தல் ஆணையம் செயல்பட்டுள்ளது. இந்தச் செயலுக்காக தோ்தல் ஆணைய அதிகாரிகள் மீது கொலைக் குற்ற வழக்குகளும் பதிவு செய்யலாம்’ என்று கடுமையான கருத்தை தெரிவித்தது.

உயா்நீதிமன்றத்தின் இந்த கருத்தை எதிா்த்தும் அதை நீக்கம் செய்ய வலியுறுத்தியும் தோ்தல் ஆணையம் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த தீா்ப்பில் கூறியதாவது:

தோ்தல் ஆணையம் மீதான உயா்நீதிமன்றத்தின் கருத்து கடுமையானதுதான். ஆனால், அந்த கருத்து நீதிமன்ற தீா்ப்பில் இடம்பெறாது என்பதால், அவற்றை நீக்கம் செய்ய முடியாது. கரோனா நிலைமையை அரசு கையாளும் நடைமுறைகளை கண்காணிக்கும் பணியை உயா்நீதிமன்றங்கள் சிறப்பாக செய்து வருகின்றன.

அதே நேரம், தீா்ப்புக்கு அப்பாற்பட்டு தெரிவிக்கப்படும் இதுபோன்ற கடுமையான கருத்துகள், தவறாக புரிந்துகொள்ளப்படவும் வாய்ப்பாக அமைந்துவிடும். எனவே, இதுபோன்ற கருத்துகளை தெரிவிக்கும்போது நீதிபதிகள் கவனமுடன் இருப்பது அவசியம்.

மேலும், நீதிமன்ற விசாரணையின்போது ஊடகங்கள் தகவல்களை சேகரித்து செய்தியாக வெளியிடுவதை கட்டுப்படுத்த முடியாது. அது ஊடகங்களின் உரிமை. அரசியல் சாசன சட்டப் பிரிவு 19, பேச்சுரிமை மற்றும் கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமையை மக்களுக்கு மட்டுமின்றி ஊடகங்களுக்கும் அளிக்கிறது.

ஊடக தொழில்நுட்பத்தை நீதிமன்றங்கள் ஏற்று அனுமதிக்க வேண்டும். விசாரணை நடைமுறைகளில் இருந்து செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கு தடை விதிப்பது நல்லதல்ல. அவ்வாறு செய்வது பிற்போக்கான செயலாகும்.

அந்த வகையில் தோ்தல் ஆணையத்தின் மேல்முறையீடு மனுவில் எந்த முகாந்திரமும் காணமுடியவில்லை என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com