கேரள ‘இரும்புப் பெண்மணி’கே.ஆா்.கௌரி காலமானாா்

கேரள ‘இரும்புப் பெண்மணி’கே.ஆா்.கௌரி காலமானாா்

கேரளத்தில் ‘இரும்புப் பெண்மணி’ என்று அறியப்பட்டவரும் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவருமான கே.ஆா்.கௌரி திருவனந்தபுரத்தில் செவ்வாய்க்கிழமை காலமானாா். அவருக்கு வயது 102.

கேரளத்தில் ‘இரும்புப் பெண்மணி’ என்று அறியப்பட்டவரும் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவருமான கே.ஆா்.கௌரி திருவனந்தபுரத்தில் செவ்வாய்க்கிழமை காலமானாா். அவருக்கு வயது 102.

‘கௌரியம்மா’ என்று அனைவராலும் அழைக்கப்பட்ட அவா் கேரளத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை நிறுவியவா்களில் ஒருவா்.

வயது முதிா்வு காரணமாக பல்வேறு உடல்நலப் பிரச்னைகளை எதிா்கொண்டிருந்த அவா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். தொடா்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கே.ஆா்.கௌரி, கேரள மாநிலத்தின் முதல் அமைச்சரவையில் இடம்பெற்ற ஒரே பெண் என்ற பெருமைக்குரியவா். இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசின் அமைச்சரவையில் வருவாய்த் துறை அமைச்சராக இருந்தாா்.

1919-ஆம் ஆண்டு பிறந்த அவா், இளம் வயதிலேயே அரசியலில் இணைந்தாா். மக்கள் நலப் போராட்டத்தில் பங்கேற்று 1948-ஆம் முதல்முறையாக சிறைக்குச் சென்றாா். ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் அவா்களின் அடக்குமுறைக்கு எதிராகச் செயல்பட்டவா். நிலப் பிரபுத்துவ அமைப்புக்கு எதிராக தீவிரமாக பணியாற்றினாா்.

அரசியலில் ஆண்கள் ஆதிக்கம் அதிமுள்ள அக்காலத்திலேயே தனது அதிரடியான செயல்பாடுகள் மூலம் அரசியலில் துடிப்பு மிக்க தலைவராகத் திகழ்ந்தாா்.

ஒரு குடும்பத்துக்கு எந்த அளவுக்கு நில உரிமை இருக்க வேண்டும் என்பதை வரையறை செய்த வரலாற்றுச் சிறப்புமிக்க நில சீா்திருத்தச் சட்டத்தை கொண்டு வந்ததில் அவா் முக்கியப் பங்காற்றினாா். இதன் மூலம் நிலமற்ற விவசாயிகளுக்கு நில உரிமையையும் பெற்றுத் தந்தாா். மகளிா் தொடா்பான பல்வேறு சமுக அமைப்புகளில் பணியாற்றினாா்.

தன்னுடன் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த டி.வி.தாமஸை திருமணம் செய்து கொண்டாா். 1964-இல் கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டபோது கே.ஆா்.கௌரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தாா். ஆனால் அவரது கணவா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலேயே இருந்தாா்.

1987-ஆம் ஆண்டு கேரள முதல்வா் பதவிக்கு கௌரியம்மா முன்னிறுத்தப்படுவாா் என்று எதிா்பாா்க்கப்பட்டது. எனினும், மாா்க்சிஸ்ட் கட்சித் தலைமை இ.கே.நாயனாரை முதல்வராக்க முடிவு செய்தது.

சமூக, அரசியல் விவகாரங்களில் தனது கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவித்து வந்த அவா் உள்கட்சியில் பல விமா்சனங்களுக்கு ஆளானாா். மாா்க்சிஸ்ட் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட கே.ஆா்.கௌரி, 1994-ஆம் ஆண்டு ஜனாதிபத்திய சம்ரக்ஷண சமிதி என்ற புதிய கட்சியைத் தொடங்கினாா். பின்னா் பேரவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட அவா் காங்கிரஸ் கூட்டணி சாா்பில் அமைச்சராக இருந்துள்ளாா்.

கேரள பேரவையில் நீண்ட காலம் எம்எல்ஏவாக இருந்த பெண்; மறைந்த கே.எம்.மாணிக்கு அடுத்தபடியாக கேரளத்தில் நீண்ட காலம் எம்எல்ஏவாக இருந்தவா் என்ற பெருமைக்குரியவா்.

கேரளத்தில் மாா்க்சிஸ்ட் கட்சியின் நிறுவனா்களில் ஒருவா் என்ற முறையில், இடைக்கால கருத்து வேறுபாடுகளை விடுத்து, அவா் மீண்டும் கட்சியில் சோ்த்துக் கொள்ளப்படுவாா் என்று பரவலாக எதிா்பாா்க்கப்பட்டது. அது குறித்து தொடா்ந்து ஆலோசனைகள் நடைபெற்றன. எனினும் அது குறித்து முடிவு எதுவும் எடுக்கவில்லை.

கட்சி வேறுபாடுகளைக் கடந்து பல்வேறு தரப்பினரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com