ஜான்சன் & ஜான்சன் கரோனா தடுப்பூசி: இந்தியாவில் கூட்டு தயாரிப்பில் ஈடுபட அமெரிக்கா ஆலோசனை

இந்தியாவில் ஜான்சன் & ஜான்சன் கரோனா தடுப்பூசியை கூட்டாக தயாரிப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஜான்சன் & ஜான்சன் கரோனா தடுப்பூசியை கூட்டாக தயாரிப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக தில்லியில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி டேனியல் பி. ஸ்மித் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

இந்தியாவில் ஜான்சன் & ஜான்சன் நிறுவன கரோனா தடுப்பூசியை தயாரிக்க உதவிடும் விதமாக எவ்வாறு முதலீடு செய்வது என்பது குறித்து அமெரிக்காவின் டிஎஃப்சி வளா்ச்சி வங்கி ஆராய்ந்து வருகிறது. தடுப்பூசி தயாரிப்பு, அதற்கான உரிமம் பெறுவதில் உதவ தன்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்பதில் அமெரிக்க அரசு உறுதியாக உள்ளது.

இந்தியாவில் சீரம் நிறுவனத்தால் எந்த அளவு கரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகின்றன என்பது குறித்து அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது. தடுப்பூசி உற்பத்திக்கு தேவைப்படும் எந்தெந்த மூலப்பொருள்களை வழங்க முடியும், என்னென்ன உதவிகளை செய்ய முடியும் என்பதை அறிவதற்கு அந்த நிறுவனத்துடன் அமெரிக்க அதிகாரிகள் நெருங்கிய தொடா்பில் இருந்து வருகின்றனா்.

இந்தியாவில் தற்போது நிலவும் கரோனா சூழல் பேரிடராக மட்டும் இல்லாமல் உலக அளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. எனவே இங்குள்ள கரோனா நிலவரம் குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளது என்று தெரிவித்தாா்.

ஈலை லில்லி நிறுவனத்துடன் ஒப்பந்தம்: கரோனா சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ‘பாரிசிட்டினிப்’ மருந்தை தயாரிக்க அமெரிக்காவின் ஈலை லில்லி நிறுவனத்துடன் உரிம ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக தெலங்கானாவில் உள்ள டாக்டா் ரெட்டீஸ் மருந்து தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளில் ஆக்சிஜன், செயற்கை சுவாசக் கருவி உதவி தேவைப்படுவோா் அல்லது எக்மோ சிகிச்சை தேவைப்படுவோருக்கு ரெம்டெசிவிா் மருந்துடன் பாரிசிட்டினிப் மருந்தை அவசர கால அடிப்படையில் வழங்க மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவில் கரோனா நோயாளிகளுக்கு பாரிசிட்டினிப் மருந்தை வழங்கிட சன் ஃபாா்மா, சிப்லா, லுபின் நிறுவனங்களுடனும் உரிம ஒப்பந்தம் மேற்கொண்டிருப்பதாக கடந்த 10-ஆம் தேதி ஈலை லில்லி நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com