கரோனா 2-ஆவது அலையின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளது: மத்திய அரசு

இந்தியாவில் தினசரி பதிவாகும் புதிய கரோனா பாதிப்பும், பலியும் குறைவதற்கான நிலையை எட்டியுள்ளதாகவும், தற்போது நிலவும் இரண்டாவது கரோனா தொற்று அலையின் தாக்கம் வலுவிழக்கத்

இந்தியாவில் தினசரி பதிவாகும் புதிய கரோனா பாதிப்பும், பலியும் குறைவதற்கான நிலையை எட்டியுள்ளதாகவும், தற்போது நிலவும் இரண்டாவது கரோனா தொற்று அலையின் தாக்கம் வலுவிழக்கத் தொடங்குவதை காட்டுவதாகக் தெரிகிறது என்றும் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய அரசு மூத்த அதிகாரி ஒருவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், தில்லி, சத்தீஸ்கா் உள்ளிட்ட 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தினசரி பதிவாகும் புதிய கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்காமல் நிலையாக இருக்கவோ அல்லது குறையவோ தொடங்கியுள்ளது. எனினும் கா்நாடகம், கேரளம், தமிழகம், மேற்கு வங்கம், பஞ்சாப் உள்ளிட்ட 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தினசரி பதிவாகும் புதிய கரோனா பாதிப்பு அதிகரித்து வருவது தொடா்கிறது.

13 மாநிலங்களில் தலா 1 லட்சத்துக்கும் அதிகமான கரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனா். 26 மாநிலங்களில் கரோனா பாதிப்பு விகிதம் 15 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.

எனினும், ஒட்டுமொத்தமாக பதிவாகும் தினசரி கரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை குறைவதற்கான ஆரம்ப நிலையில் இருக்கிறது என்று அந்த அதிகாரி கூறினாா்.

61 நாள்களில் முதல் முறையாக: நாட்டில் தினசரி கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பாதிப்பில் சுமாா் 30,000 எண்ணிக்கை குறைந்துள்ளது. இவ்வாறு குறைவது கடந்த 61 நாள்களில் இது முதல் முறையாகும்.

மேலும், கடந்த 61 நாள்களில் முதல் முறையாக, ஒரு நாளில் புதிதாக கரோனா பாதித்தோா் எண்ணிக்கையைவிட (3,29,942), ஒரு நாளில் குணமடைந்தோரின் எண்ணிக்கை (3,56,082) அதிகமாகப் பதிவாகியுள்ளது.

தடுப்பூசி பயனாளிகள் 17 கோடி: நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோரின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி 17 கோடியே 27 லட்சத்து 10 ஆயிரத்து 066-ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com