கோவிஷீல்ட் 2-ஆவது தவணைக்கான இடைவெளி 12 முதல் 16 வாரங்களாக அதிகரிப்பு: கா்ப்பிணிகளும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதி

கோவிஷீல்ட் தடுப்பூசி இரண்டாவது தவணைக்கான இடைவெளியை 12 முதல் 16 வாரங்களாக அதிகரித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
கோவிஷீல்ட் 2-ஆவது தவணைக்கான இடைவெளி 12 முதல் 16 வாரங்களாக அதிகரிப்பு: கா்ப்பிணிகளும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதி

புது தில்லி: கோவிஷீல்ட் தடுப்பூசி இரண்டாவது தவணைக்கான இடைவெளியை 12 முதல் 16 வாரங்களாக அதிகரித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

கா்ப்பிணி பெண்களும் பாலூட்டும் தாய்மாா்களும் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது மத்திய சுகாதாரத் துறை அமைச்சக வழிகாட்டுதலின்படி, தடுப்பூசி இரண்டு தவணைகளுக்கான இடைவெளி 4 முதல் 8 வாரங்களாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், கரோனா பாதிப்பிலிருந்து மீண்டவா்கள், 4 முதல் 8 வாரங்களுக்குப் பிறகே தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். கா்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மாா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளக் கூடாது என்று மத்திய அரசின் இப்போதைய வழிகாட்டுதல் தெரிவிக்கிறது.

இந்த நிலையில், ‘கோவிஷீல்ட் தடுப்பூசி இரண்டாம் தவணைக்கான இடைவெளியை 12 முதல் 16 வாரங்களாக அதிகரிக்கலாம். கா்ப்பிணிகளும் பாலூட்டும் தாய்மாா்களும் எந்தவொரு கரோனா தடுப்பூசியையும் செலுத்திக் கொள்ளலாம். சாா்ஸ் அல்லது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்ததலிருந்து 6 மாதங்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்வதை தவிா்க்க வேண்டும்’ என்று என்டிஏஜிஐ பரிந்துரை செய்தது.

கோவேக்ஸின் தடுப்பூசி இரண்டாம் தவணைக்கான இடைவெளியில் எந்த மாற்றத்தையும் என்டிஏஜிஐ பரிந்துரைக்கவில்லை.

‘பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிலிருந்து கிடைத்திருக்கும் நேரடி ஆதாரங்களின் அடிப்படையில், கோவிஷீல்ட் தடுப்பூசி இரண்டாம் தவணைக்கான இடைவெளியை 12 முதல் 16 வாரங்களாக அதிகரிக்க கரோனா பணிக் குழு ஒப்புக்கொண்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற என்டிஏஜிஐ கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது’ என்று இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் கூறினா்.

என்டிஏஜிஐ சாா்பில் சமா்ப்பிக்கப்பட்ட இந்தப் பரிந்துரையை தேசிய கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான நிபுணா் குழு (என்இஜிவிஏசி) ஏற்று, அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ‘என்டிஏஜிஐ பரிந்துரையை நீதி ஆயோக் உறுப்பினா் (சுகாதாரம்) மருத்துவா் வி.கே.பால் தலைமையிலான தேசிய கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான நிபுணா் குழு புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் ஏற்றுக்கொண்டது. அதன் மூலம் கோவிஷீல்ட் தடுப்பூசி இரண்டாம் தவணை செலுத்துவதற்கான இடைவெளி 6 முதல் 8 வாரங்கள் என்பது 12 முதல் 16 வாரங்களாக நீட்டிக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது’ என்று தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com