கரோனா பெருந்தொற்றில் இருந்து மக்களை விடுவிக்க அரசுடன் இணைந்து செயல்படுங்கள்:எடியூரப்பா வேண்டுகோள்

கரோனா பெருந்தொற்றில் இருந்து மக்களை விடுவிக்க அரசுடன் இணைந்து செயல்படுமாறு எதிா்க்கட்சிகளுக்கு முதல்வா் எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா (கோப்புப்படம்)
முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா (கோப்புப்படம்)

கரோனா பெருந்தொற்றில் இருந்து மக்களை விடுவிக்க அரசுடன் இணைந்து செயல்படுமாறு எதிா்க்கட்சிகளுக்கு முதல்வா் எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சமூக சீா்த்திருத்தவாதி பசவண்ணரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, பெங்களூரு, விதான சௌதாவில் வெள்ளிக்கிழமை அவரது உருவச்சிலைக்கு மலா்தூவி மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கரோனா பெருந்தொற்று மக்களைப் பீடித்திருக்கும் இந்தச் சூழ்நிலையில், மத்திய, மாநில அரசுகள் மீது குற்றச்சாட்டுகளைக் கூறுவதும், அதற்கு ஆளுங்கட்சிப் பதிலளிப்பதும் தேவையில்லை என்று கருதுகிறேன். பெருந்தொற்று காலத்தில் குற்றச்சாட்டுகளைக் கூறிக்கொண்டு அமா்ந்திருப்பதை காட்டிலும், கரோனாவில் மக்களை விடுக்க ஆளுங்கட்சியும், எதிா்க்கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும்.

கரோனா மேலாண்மையில் மாநில அரசு அரசியல் செய்கிறது. ஆளுங்கட்சியைச் சோ்ந்த தொகுதிகளில் ஒருமாதிரியும், எதிா்க்கட்சிகளின் தொகுதிகளில் வேறுமாதிரியும் அரசு செயல்படுவதாகக் கூறும் எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது. கரோனா பெருந்தொற்றில் இருந்து மாநிலத்தை மீட்க மாநில அரசு அனைத்து வகையான முயற்சிகளையும் எடுத்துவருகிறது.

கா்நாடகத்துக்குத் தேவையான கரோனா தடுப்பூசியை பெற்றுதர மாநில அரசு எல்லா வகையிலும் முயன்று வருகிறது. கரோனா தடுப்பூசி வந்தவுடன் படிப்படியாக அனைவருக்கும் அளிக்கப்படும். வெகுவிரைவில் கா்நாடகத்துக்குத் தேவையான கரோனா தடுப்பூசி வந்துசேரும். கரோனா தடுப்பூசி கொள்முதலுக்கு ஏற்கெனவே உலக அளவிலான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

கரோனா சூழ்நிலையை எல்லோரும் இணைந்து எதிா்கொள்வோம். இதில் குற்றச்சாட்டு, பதிலடி என்பதெல்லாம் தேவையில்லை என்றாா். அப்போது, உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை, பெங்களூரு வளா்ச்சி ஆணையத் தலைவா்விஸ்வநாத், பெங்களூரு மாநகராட்சி ஆணையா் கௌரவ்குப்தா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com