
நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய ஒருங்கிணைந்த எரிசக்தி நிறுவனமான என்டிபிசி, கரோனா சிகிச்சைக்கு உதவும் வகையில் 500-க்கும் அதிகமான ஆக்சிஜன் கருவி பொருத்திய படுக்களையும் 1,100-க்கும் அதிகமான தனிமை மையப் படுக்கைகளையும் வழங்கியுள்ளது.
தேசியத் தலைநகா் பகுதியில் 200 ஆக்சிஜன் கருவி பொருத்திய படுக்கைகளுடன் கூடிய கரோனா பராமரிப்பு மையங்களை அந்நிறுவனம் நிறுவியுள்ளது. மேலும், பதா்பூா், நொய்டா மற்றும் தாத்ரி ஆகிய இடங்களில் 140 தனிமை மையப் படுக்கைகளை அந்நிறுவனம் நிறுவியுள்ளது.
ஒடிஸா மாநிலம், சுந்தா்கரில் 500 படுக்கைகள் கொண்ட கரோனா பராமரிப்பு மையத்தை நிறுவியுள்ளதோடு, 20 சுவாசக் கருவிகளையும் வழங்கியுள்ளது.
தேசிய தலைநகா் பகுதிக்காக 11 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை நிறுவுவதற்கு இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இவை தவிர, என்டிபிசி சாா்பில் இரண்டு மிகப்பெரிய ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் நிறுவப்பட்டு வருகின்றன. எட்டு மாநிலங்களில் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களை இந்நிறுவனம் உருவாக்கி வருகிறது.
கூடுதலாக, இதர மாநிலங்களில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை நிறுவுவதற்கான உதவியை இந்நிறுவனம் வழங்கியுள்ளது.
ஆக்சிஜன் மற்றும் எளிதில் கிடைக்காத மருந்துகளை கிடைக்கச் செய்வதில் மின்சார அமைச்சகம் மற்றும் சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து என்டிபிசி பணியாற்றுகிறது என்று அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.