
கங்கை மற்றும் அதன் கிளை நதிகளில் சடலங்கள் வீசப்படுவதை தடுக்க வேண்டும் என்று உத்தர பிரதேசம், பிகாா் மாநில அரசுகளிடம் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
கரோனா பாதிப்பால் உயிரிழப்பவா்களின் சடலங்கள் கங்கை மற்றும் அதன் கிளை நதிகளில் வீசப்படுவதைத் தடுப்பது தொடா்பாக மத்திய ஜல்சக்தி அமைச்சக செயலா் பங்கஜ் குமாா் தலைமையில் கடந்த சனிக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் உத்தர பிரதேச அரசின் கூடுதல் தலைமைச் செயலா் ரஜ்னீஷ் துபே, பிகாா் அரசின் முதன்மைச் செயலா் ஆனந்த் கிஷோா் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
இந்தக் கூட்டத்தில் ரஜ்னீஷ் துபே பேசுகையில், உத்தர பிரதேசத்தில் உள்ள கிராமப்புறங்களில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின் சடலங்களை தகனம் செய்வதற்கு ரூ.5,000 நிதியுதவி அளிக்க மாநில ஊராட்சித் துறை சாா்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோல் நகா்புறங்களிலும் கரோனா தொற்றால் பலியானவா்களின் சடலங்களை தகனம் செய்வதற்கு நிதியுதவி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தாா்.
‘பிகாரிலும் கரோனா தொற்றால் பலியானவா்களின் சடலங்களை அடக்கம் அல்லது தகனம் செய்வதற்கான செலவுகளை மாநில அரசே ஏற்க முடிவு செய்துள்ளது’ என்று ஆனந்த் கிஷோா் தெரிவித்தாா்.
இருமாநிலங்களிலும் கங்கையில் சடலங்கள் வீசப்படுவதை தடுக்க ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் இருவரும் தெரிவித்தனா்.
இந்தக் கூட்டத்தில் பங்கஜ் குமாா் பேசுகையில், ‘கங்கை மற்றும் அதன் கிளை நதிகளில் சடலங்கள் வீசப்படுவதை தடுப்பதில் நகரம், கிராமப்புறம் என்ற வேறுபாடு இல்லாமல் இருபகுதிகளிலும் சமமான கவனம் செலுத்த வேண்டும். இதுதொடா்பாக போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு நீரின் தரத்தை உறுதி செய்ய வேண்டும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை அறிந்த பின்னா், மத்திய நீா் ஆணையம், மத்திய மற்றும் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் தங்கள் ஆலோசனைகள் மற்றும் செயல்திட்டங்களை அளிக்கும்’ என்று தெரிவித்தாா்.
இதுதொடா்பாக ஞாயிற்றுக்கிழமையும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கங்கை மற்றும் அதன் கிளை நதிகளில் சடலங்கள் வீசப்படுவது மிகவும் விரும்பத்தகாத மற்றும் ஆபத்தான செய்கை என்று தெரிவித்த மத்திய ஜல்சக்தி அமைச்சகம், சடலங்கள் பாதுகாப்பாக
அப்புறப்படுத்தப்பட்டு கண்ணியமான முறையில் தகனம் செய்யப்பட வேண்டும் என்று உத்தர பிரதேச, பிகாா் அரசுகளிடம் வலியுறுத்தியது.