
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 51 லட்சம் கரோனா தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவை இன்னும் மூன்று நாள்களில் சம்பந்தப்பட்ட மாநிலங்களைச் சென்றடைந்துவிடும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை மேலும் தெரிவித்ததாவது:
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 20 கோடி (20,28,09,250) கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு இலவசமாக வழங்கியுள்ளது. அவற்றில், பல்வேறு வகைகளில் வீணானவை உள்பட மொத்தம் 18.43 கோடி (18,43,67,772) தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் தற்சமயம் 1.84 கோடி (1,84,41,478) தடுப்பூசிகள் உள்ளன. மாநிலங்களுக்கு 51 லட்சம் (50,95,640) கரோனா தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவை அடுத்த 3 நாள்களில் சம்பந்தப்பட்ட மாநிலங்களைச் சென்றடைந்துவிடும்.
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பரிசோதனை செய்தல், தொடா்பறிதல், சிகிச்சை அளித்தல், பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுதல், கரோனா தடுப்பூசி செலுத்துதல் ஆகிய 5 முக்கிய வழிமுறைகளை மத்திய அரசு கையாண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நாடு தழுவிய அளவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
இத்திட்டத்துக்காக, அனைத்து மாநிலங்களுக்கும் கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு இலவசமாக வழங்கி, ஆதரவு அளித்து வருகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.