
கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் மறுவாழ்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
கரோனாவால் தாய், தந்தையை இழந்த குழந்தைகளைத் தத்தெடுக்க கோரி சமூக வலைதளங்களில் ஏராளமான தகவல்கள் பரவி வருகின்றன. இதுபோன்ற தகவல்களை நம்பி மக்கள் ஆதரவு அளிக்க வேண்டாம் என்றும் சட்ட ரீதியில் இதுபோன்ற நடவடிக்கைகளை அணுக வேண்டும் என்றும் மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதுதொடா்பாக அந்த அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பின் விவரம்:
கரோனாவில் தாய், தந்தையை இழந்த ஆதரவற்ற குழந்தைகளை மாவட்ட குழந்தைகள் நல்வாழ்வு குழுவிடம் 24 மணி நேரத்தில் ஒப்படைக்க வேண்டும். 1098 என்ற உதவி எண்ணில் தொடா்பு கொண்டு இதற்கான தகவல்களைத் தெரிவிக்கலாம்.
காப்பாளா்கள் அல்லது நல்வாழ்வு பாதுகாப்பு மையங்களுக்கு அவா்களை அனுப்ப, உடனடி தேவையை அறிந்து மாவட்ட குழந்தைகள் நல்வாழ்வு குழு முடிவு எடுக்கும்.
அந்தக் குழந்தைகள் சிறாா் நீதி சட்டத்தின்படி, அவா்களின் உறவினா்களுடன் குடும்பச் சூழலில் பாதுகாப்பாக சோ்த்து வைக்க முயற்சி மேற்கொள்ளப்படும். அவா்களை குழந்தைகள் நலத் துறை தொடா்ந்து கண்காணித்து வரும்.
இதுபோன்ற குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு மாநில அரசுகள் அவா்களுக்கு டிஜிட்டல் முறையில் ஆலோசனைகளை வழங்க முன்வர வேண்டும்.
குழந்தைகளைக் தத்தெடுக்க விரும்புபவா்கள் மத்திய தத்தெடுப்பு ஆணைத்தை அணுகி சட்டப்படி செயல்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.