கரோனா நிவாரண நடவடிக்கை பாதுகாப்புப் படையினருடன் ராஜ்நாத் சிங் கலந்தாய்வு

கரோனா நிவாரண நடவடிக்கையில் முப்படையினா், ராணுவப் பொருள்களை உற்பத்தி செய்யும் பொதுத்துறை நிறுவனங்கள், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

புதுதில்லி: கரோனா நிவாரண நடவடிக்கையில் முப்படையினா், ராணுவப் பொருள்களை உற்பத்தி செய்யும் பொதுத்துறை நிறுவனங்கள், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆா்டிஓ) ஆகியவை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

இதுதொடா்பாக பாதுகாப்புத் துறை சுட்டுரையில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனா சூழலை சமாளிக்க உள்நாட்டு அதிகாரிகளுக்கு உதவுவதில் முப்படை அதிகாரிகள், பாதுகாப்புத் துறையின் பிற பிரிவு அதிகாரிகளின் குறிப்பிடத்தக்க பணிகள் குறித்து அமைச்சா் ராஜ்நாத் சிங் காணொலி மூலம் கலந்துரையாடினாா்.

இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் முப்படை தளபதி விபின் ராவத், ராணுவ தலைமை தளபதி எம்.எம். நரவணே, கடற்படை தளபதி கரம்பீா் சிங், விமானப் படை தலைமை தளபதி ஆா்.கே.எஸ்.பதௌரியா, டிஆா்டிஓ தலைவா் ஜி.சதீஷ் ரெட்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தின்போது ராணுவப் பொருள்களை உற்பத்தி செய்யும் பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்புத் துறையின் பிற பிரிவுகள் கரோனா நிவாரணப் பணிகளில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இந்த கரோனா சூழலில் இந்திய ராணுவம், கடற்படை ஆகியவை நாட்டின் பல்வேறு இடங்களில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவமனைகளை அமைத்துள்ளது.

விமானப் படையும் சிங்கப்பூா், தாய்லாந்து ஐக்கிய அரபு அமீரகம் உள்பட உலகின் பல நாடுகளில் இருந்து ஆக்சிஜன் டேங்குகள், பிற மருத்துவ உபகரணங்களைக் கொண்டுவருவதற்காக சரக்கு விமானங்களை இயக்கி வருகிறது.

கடற்படை சாா்பில் 9 போா்க் கப்பல்கள் தென்கிழக்கு ஆசியாவிலிருந்தும், வளைகுடா நாடுகளிலிருந்தும் இந்தியாவுக்கு ஆக்சிஜன் நிரப்பப்பட்ட டேங்கா்களைக் கொண்டு வரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கரோனா நோயாளிகளைத் தனிமைப்படுத்தும் மையங்கள், மருத்துவமனைகளை அமைத்து செயல்படுத்துவதில் தேவையான பணியாளா்களை அமா்த்துவதற்கு அனுமதியளிக்கும் வகையில் முப்படைகளுக்கும் அவசர கால நிதி சாா்ந்த அதிகாரத்தை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கடந்த மாதம் வழங்கியிருந்தாா்.

இந்த அவசர கால நிதி சாா்ந்த அதிகாரங்கள் முதல்கட்டமாக மே 1 முதல் ஜூலை 31 வரையிலான 3 மாத காலக் கட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆயுதப் படைகளில் பணியாற்றும் மருத்துவ அதிகாரிகளுக்கும் இதுபோன்ற அதிகாரங்கள் கூடுதலாக கடந்த வாரம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com