‘சிங்கப்பூர் மீது மட்டுமே மத்திய அரசுக்கு அக்கறை’: தில்லி துணை முதல்வர் விமர்சனம்

மத்திய அரசு கரோனாவால் குழந்தைகள் பாதிக்கப்பட இருப்பதைக் குறித்து கண்டுகொள்ளாமல் சிங்கப்பூர் குறித்து கவலைப்படுகிறது என தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா விமர்சித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மத்திய அரசு கரோனாவால் குழந்தைகள் பாதிக்கப்பட இருப்பதைக் குறித்து கண்டுகொள்ளாமல் சிங்கப்பூர் குறித்து கவலைப்படுகிறது என தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா விமர்சித்துள்ளார்.

சிங்கப்பூரில் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் பரவி வருவதால் இந்தியா -சிங்கப்பூர் இடையே விமான சேவை ரத்து செய்யப்பட வேண்டும் என்று  தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நேற்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார். 

தில்லி முதல்வரின் கருத்துக்கு சிங்கப்பூர் கரோனா என எதுவும் இல்லை என்று சிங்கப்பூர் வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து இந்தியா சார்பாக அரவிந்த் கேஜரிவால் பேசவில்லை என மத்திய அரசு தரப்பில் சிங்கப்பூர் அரசுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், கரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா மற்றும் சிங்கப்பூர் இணைந்து செயல்பட்டு வரும் நிலையில், சிலரது பொறுப்பற்ற பேச்சால் இரு நாட்டு உறவில் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மத்திய அரசின் இந்த கருத்துக்கு பதிலளித்துள்ள தில்லி துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியா, “சிங்கப்பூரில் கரோனா தொற்று நிலைமை குறித்து நேற்று தில்லி முதல்வர் கெஜ்ரிவால் பேசியிருந்தார். உருமாறிய கரோனா மூலம் அதிக குழந்தைகளுக்கு தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து அதிகரித்து வருவதாக அவர் கூறியிருந்தார். அதன்காரணமாகவே சிங்கப்பூர் உடனான போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்த அவர் கோரியிருந்தார். இந்த நிலையில் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும்,  “பாஜக இந்த விவகாரத்தில் மோசமான அரசியலைத் தொடங்கியுள்ளது. கேஜரிவால் நம் நாட்டின் குழந்தைகளைப் பற்றி கவலைப்படுகிறார். ஆனால், மத்திய பாஜக அரசு குழந்தைகளுக்கு தடுப்பூசிகளைப் பெற நடவடிக்கை எடுக்காமல் சிங்கப்பூரைப் பற்றி கவலைப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com