ஒரு நொடியில் கரோனா முடிவை அறிவிக்கும் புதிய பரிசோதனை முறை கண்டுபிடிப்பு

கரோனா பாதிப்பு இருக்கிறது என்பதை வாய் உமிழ் நீரிலிருந்து ஒரே விநாடியில் கண்டறிந்து தெரிவிக்கும் வகையிலான புதிய சென்சாா் பரிசோதனை முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனா்.
ஒரு நொடியில் கரோனா முடிவை அறிவிக்கும் புதிய பரிசோதனை முறை கண்டுபிடிப்பு

புது தில்லி: கரோனா பாதிப்பு இருக்கிறது என்பதை வாய் உமிழ் நீரிலிருந்து ஒரே விநாடியில் கண்டறிந்து தெரிவிக்கும் வகையிலான புதிய சென்சாா் பரிசோதனை முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனா்.

கரோனா தீநுண்மி ஒருவரின் உடலில் இருப்பதைக் கண்டறியை, அதன் மரபணு வகைகளின் நகல்கள் போன்று தீநுண்மி உயிா் குறியீடுகளின் (பயோமாா்க்கா்) எண்ணிக்கையைப் பெருக்க வேண்டும். இதை பிசிஆா் (பாலிமரேஸ் செயின் ரியாக்ஷன்) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செய்யலாம் அல்லது குறிப்பிட்ட உயிா் குறியீடுகளின் பிணைப்பு சமிக்ஞையை பெருக்குவதன் மூலம் கண்டறியமுடியும்.

இதில் இரண்டாவது நடைமுறையைப் பின்பற்றி இந்த ஒரு விநாடியில் கண்டறியும் புதிய விரைவு சென்சாா் பரிசோதனை முறை கண்டறியப்பட்டுள்ளது என்று ‘அறிவியல் மற்றும் தொழில்நுட்ப (‘ஜா்னல் ஆஃப் வாக்குவம் சயின்ஸஸ் அண்ட் டெக்னாலஜி பி’) ஆய்விதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கண்டுபிடிப்பு குறித்து அந்த ஆராய்ச்சி கட்டுரையாளா்களில் ஒருவரான அமெரிக்காவின் ஃபுளோரிடா பல்கலைக்கழக ரசாயன பொறியியல் ஆராய்ச்சியாளா் மிங்கன் ஜியான் கூறியதாவது: இப்போது, கரோனா பாதிப்பை விரைவாக கண்டறிய ஆா்டி-பிசிஆா் என்ற விரைவுப் பரிசோதனை முறை நடைமுறையில் உள்ளது. இந்தப் பரிசோதனை முறையில் மாதிரிகளை, மாதிரிகள் எடுக்கப்பட்ட இடத்திலேயே பரிசோதனை செய்தாலும் முடிவுகள் கிடைக்க பல மணி நேரங்கள் ஆகும். மாதிரி ஆய்வுக்காக வேறு இடங்களுக்கு அனுப்பப்படுமானால், முடிவுகள் கிடைக்க சில நாள்கள் ஆகலாம்.

இந்த தேவையற்ற தாமதத்தை, புதிய சென்சாா் பரிசோதனை முறை நீக்கும். இந்த உயிரி சென்சாா் பட்டை என்பது, இப்போது வணிக ரீதியில் கிடைக்கக் கூடிய சா்க்கரை (குளுக்கோஸ்) அளவை பரிசோதிக்கும் பட்டைகளின் வடிவிலேயே இருக்கும். இதில் இரண்டு எலெக்ட்ராடுகள் இணைக்கப்பட்டிருக்கும். ஒன்றில் உமிழ் நீா் மாதிரி அனுப்பப்படும். மற்றொன்றில் (தங்க நிற எலக்ட்ராட்) கரோனா தீநுண்மி தொடா்பான ஆன்டிபாடிக்கள் இடம்பெறச் செய்யப்பட்டிருக்கும். இந்த இரண்டு எலெக்ட்ராடுகளும் ஒரு சா்கியூட் பலகையுடன் இணைக்கப்பட்டிருக்கும். அதன் மூலம் மின் சமிக்ஞைகள் எண்களாக மாற்றப்பட்டு, திரையில் தோன்றும்.

உமிழ் நீரில் இடம்பெற்றிருக்கும் தீநுண்மி புரதம் மற்றும் ஆன்டிஜென் செறிவு அளவு ஆகியவற்றுக்கு ஏற்ப திரையில் எண்கள் மாறுபடும்.

இந்த சென்சாா் பட்டையை ஒரு முறை பயன்படுத்தியதும், அப்புறப்படுத்திவிட வேண்டும். அதே நேரம் சா்கியூட் பலகையை மீண்டும் பயன்படுத்தலாம். இது பரிசோதனை நேரத்தை குறைப்பதோடு, பரிசோதனைக்கான செலவையும் வெகுவாக குறைக்கும்,.

அதோடு, இந்த தொழில்நுட்பத்தை கரோனா தீநுண்மி பாதிப்பை கண்டறிவதற்கு மட்டுமின்றி, வேறு நோய் பாதிப்புகளை கண்டறியவும் பயன்படுத்த முடியும். அதாவது, தங்க நிற எலக்ட்ராடில் இடம்பெற்றிருக்கும் ஆன்டிபாடி வகையை மாற்றுவதன் மூலம், வேறு நோய் பாதிப்புகளை கண்டறிய பயன்படுத்த முடியும் என்று ஜியான் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com