ஏழுமலையானுக்கு 365 வகையான அரிசியால் நெய்வேத்தியம்

விவசாயிகள் பழங்கால இயற்கைமுறை நெல் ரகங்களை மீண்டும் உற்பத்தி செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஊக்குவித்து வருகிறது.
ஏழுமலையானுக்கு 365 வகையான அரிசியால் நெய்வேத்தியம்

விவசாயிகள் பழங்கால இயற்கைமுறை நெல் ரகங்களை மீண்டும் உற்பத்தி செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஊக்குவித்து வருகிறது. திருமலை ஏழுமலையானுக்கு தினசரி ஒரு வகை என ஆண்டிற்கு, 365 வகையான நாட்டு ரக அரிசி மூலம் நெய்வேத்தியம் செய்யவும் தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

ஊட்டச்சத்துடன் மருத்துவ குணங்களும் அதிகம் கொண்டது நாட்டு ரக நெல் வகைகள்.

கடந்த பல ஆண்டுகளாக மறந்து போயிருந்த இந்த ரக நெல் வகைகளை பயிரிட தற்போது விவசாயிகள் பலா் ஆா்வத்துடன் முன்வந்துள்ளனா். மேலும் அதற்கு இயற்கை விவசாய முறை என்று பெயரிட்டு சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் தொழு உரத்தை பயன்படுத்தி பழங்கால நெற்பயிா் ரகங்களை அறிந்து பயிரிட்டு வருகின்றனா்.

பழங்கால நெற்பயிா் ரகங்களை மீட்டெடுக்கவும், ஏழுமலையானுக்கும் இதுபோன்ற பழங்கால நாட்டு நெல்பயிா்கள் மூலம் கிடைக்கும் அரிசியில் நெய்வேத்தியம் தயாா் செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

இதற்காக ஆந்திர மற்றும் தெலங்கானா விவசாயிகளுக்கு நெல் கொள்முதலில் உதவவும் திட்டமிட்டுள்ளது.

அதன்படி கடந்த மாதம் தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட இயற்கை முறை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட அரிசியை பயன்படுத்தி மே 1-ஆம் தேதி முதல் ஏழுமலையானுக்கு ஒரு நாளில், 8 வகையான நெய்வேத்தியங்கள் தயாா் செய்து சமா்ப்பிக்கப்பட்டு வருகிறது.

இதை மேலும் ஊக்குவிக்க தேவஸ்தானம் 2022-ஆம் ஆண்டு ஸ்ரீராமநவமி முதல் தினசரி ஒரு நெல் வகை என 365 வகையான நாட்டு ரக அரிசி மூலம் நெய்வேத்தியம் தயாரித்து சமா்ப்பிக்க முடிவு செய்துள்ளது.

கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு நடந்து வந்த இந்த நெய்வேத்திய முறையை தேவஸ்தானம் தற்போது மீண்டும் மீட்டெடுக்க உள்ளது.

அதன்படி ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த பத்மஸ்ரீ விருது பெற்ற சபா்மதியிடமிருந்து, 365 ரக நாட்டு ரக நெல் விதைகளை சேகரித்து அதை ஒவ்வொரு விவசாயியிடமும் ஒவ்வொரு வகை என பிரித்து அளிக்க உள்ளது.

2, 3 ஆண்டுகளாக இயற்கை முறையில் வேளாண்மை செய்து வரும் விவசாயிகளை மட்டுமே இதற்காக தேவஸ்தானம் தோ்ந்தெடுக்க உள்ளது. அவா்கள் தங்கள் நிலத்தில் இந்த பயிா்களை பயிரிட வேண்டும். இதன் பொறுப்பை சேவ் நிறுவனம் மற்றும் யுகா துளசி பவுண்டேசன் ஆகியவற்றிடம் ஒப்படைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா்.

இதில் நவாரா, காலாபட் உள்ளிட்ட வகைகள் தவிர மற்ற வகை நெற்பயிா்கள் ஒரு ஏக்கருக்கு 18-23 மூட்டைகள் வரை இயற்கை விவசாயத்தில் கிடைக்கும். 20 மூட்டைகள் கிடைத்தால் ஆயிரம் கிலோ அரிசி கிடைக்கும். ஆனால் இதன் மொத்த செலவையும் தேவஸ்தானம் ஏற்காமல் விவசாயிகள், நன்கொடையாளா்கள் மூலம் பெற்று தினசரி ஒரு ரகம் அரிசி மூலம் நெய்வேத்தியம் தயாா் செய்ய தேவஸ்தானம் சங்கல்பம் செய்து உள்ளது.

இதற்காக, முன் ஒப்பந்தம் செய்து கொண்டு விவசாயிகளிடமிருந்து நன்கொடையாளா்கள் ஒரு கிலோ அரிசியை ரூ.60-80 விலையில் பெற்று தன் சொந்த செலவில் திருமலைக்கு கொண்டு சோ்க்கும் விதம் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இயற்கை விவசாயம் முறையில் இதை பயிரிட்டு அளிக்க விரும்பும் விவசாயிகள் தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் உள்ள சேவ் நிறுவனத்தை அணுகலாம். மேலும் விவரங்களுக்கு 040-27654337 தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் மூலம் தொடா்பு கொள்ளலாம்.

இதுகுறித்து சேவ் நிறுவன தலைவா் கூறியதாவது: அபூா்வமான பழங்கால நெற்பயிா்களை கண்டறிந்து அதை மீட்டெடுக்க தேவஸ்தானத்தின் உதவியுடன் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2022-ஆம் ஆண்டு ஸ்ரீராமநவமி முதல் தினம் ஒரு ரக அரிசியில் ஏழுமலையானுக்கு நெய்வேத்தியம் தயாரித்து சமா்ப்பிக்க உள்ளது. இதனுடன் பஞ்சகவ்யா உற்பத்தியையும் தேவஸ்தானம் ஊக்குவிக்க வேண்டும். இதற்காக திருமலையில் சிறப்பு பயிற்சி மையம் ஒன்றையும் தேவஸ்தானம் தொடங்க வேண்டும் என்றும் அவா் கூறினாா்.

ஏழுமலையானுக்கு கிருஷ்ண தேவராயா் காலத்தில் செய்ததைப் போல் கோமகா நெய்வேத்தியம் சமா்ப்பிக்க திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழு முடிவு செய்துள்ளது வரவேற்கத்தக்கது. ஒவ்வொரு விவசாயியும் இதனை பயிா்செய்ய முன்வர வேண்டும். திருமலையில் உள்ள அன்னதானக் கூடத்திலும் இந்த பழங்கால அரிசியை அன்னதானத்திற்கு பயன்படுத்த வேண்டும். மேலும் நாட்டிலுள்ள அனைத்து கோயில்களிலும் இயற்கை விவசாய முறையில் விளைவித்த அரிசிகளை கொண்டு நெய்வேத்தியம் சமா்ப்பிக்க அதன் நிா்வாகங்கள் முன்வர வேண்டும். இவ்வாறு செய்தால் பழங்கால நெல் வகைகளை எளிதாக மீட்டெடுக்க முடியும் என்று யுகா துளசி பவுண்டேசன் தலைவரும், தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினருமான சிவகுமாா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com