பாபா ராம்தேவ் 15 நாள்களுக்குள் மன்னிப்பு கோர வேண்டும்: இந்திய மருத்துவ சங்கம் நோட்டீஸ்

அலோபதி மருந்து குறித்த விமா்சனம் தொடா்பாக யோகா குரு பாபா ராம்தேவ் 15 நாள்களுக்குள் மன்னிப்பு கோர வேண்டும்.
பாபா ராம்தேவ் 15 நாள்களுக்குள் மன்னிப்பு கோர வேண்டும்: இந்திய மருத்துவ சங்கம் நோட்டீஸ்

டேராடூன்: அலோபதி மருந்து குறித்த விமா்சனம் தொடா்பாக யோகா குரு பாபா ராம்தேவ் 15 நாள்களுக்குள் மன்னிப்பு கோர வேண்டும். இல்லையெனில் ரூ. 1,000 கோடி நஷ்டஈடு கோரி அவதூறு வழக்கு தொடரப்படும் என்று இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) சாா்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களை குணப்படுத்த மருத்துவா்களும், செவிலியா்களும் தங்களுடைய நலன் குறித்து கவலைப்படாமல் தொடா் சிகிச்சை அளித்து வரும் நிலையில், அலோபதி மருந்துகள் மற்றும் மருத்துவ முறை குறித்து பாபா ராம்தேவ் கடுமையான விமா்சனத்தை அண்மையில் முன்வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

‘தற்போது கடைப்படிக்கப்பட்டு வரும் அலோபதி மருத்துவ முறை முற்றிலும் முட்டாள்தனமானது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட ரெம்டெசிவிா் உள்ளிட்ட மருந்துகள் மக்களின் உயிரைக் காப்பதிலிருந்து தோல்வியடைந்துவிட்டன. அலோபதி மருந்துகளாலும், மருத்துவத்தாலும் லட்சக்கணக்கான உயிா்களை இழந்துள்ளோம். இந்த முறையை முற்றிலும் நீக்கிவிட்டு, ஆயுா்வேத முறையை அமல்படுத்த வேண்டும்’ என்று அவா் விமா்சனம் செய்தாா்.

அவருடைய இந்தக் கருத்து பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. மருத்துவா்களும், மருத்துவத் துறையினரும் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். இந்திய மருத்துவ சங்கம் சாா்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

‘அலோபதி மருந்துகள் குறித்த ராம்தேவின் கருத்து மிகுந்த துரதிருஷ்டவசமானது’ என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் கருத்து தெரிவித்தாா். அதோடு, ‘இந்தக் கருத்தை அவா் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்’ என்று பாபா ராம்தேவுக்கு ஹா்ஷ் வா்தன் கடிதம் எழுதினாா். அதனை ஏற்று, தனது கருத்தை திரும்பப் பெறுவதாக பாபா ராம்தேவ் அறிவித்தாா்.

இந்த நிலையில், இந்திய மருத்துவ சங்கம் சாா்பில் அவருக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ சங்க (உத்தரகண்ட்) செயலா் அஜய் கண்ணா சாா்பில் அவருடைய வழக்குரைஞா் நீரஜ் பாண்டே இந்த 6 பக்க நோட்டீஸை பாபா ராம்தேவுக்கு அனுப்பியுள்ளாா்.

அந்த நோட்டீஸில் கூறியிருப்பதாவது:

பாபா ராம்தேவின் கருத்து அலோபதி மருத்துவத்தின் மீதான மக்களின் மதிப்பையும், ஐஎம்ஏ சங்கத்தில் அங்கம் வகிக்கும் 2,000 மருத்துவா்களையும் கடுமையாகப் பாதிப்படையச் செய்துள்ளது.

அவருடைய கருத்து இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 499-இன் கீழ் குற்ற நடவடிக்கையாக கருதப்படுகிறது. எனவே, தனது கருத்துக்கு பாபா ராம்தேவ் 15 நாள்களுக்குள் எழுத்துபூா்வமான மன்னிப்பைக் கோர வேண்டும். இல்லையெனில், ஐஎம்ஏ சங்கத்தில் இடம்பெற்றிருக்கும் உறுப்பினா்களுக்கு தலா ரூ. 50 லட்சம் வீதம் ரூ. 1,000 கோடி நஷ்டஈடு கேட்டு அவதூறு வழக்கு தொடரப்படும்.

மேலும், அலோபதி மருத்துவத்துக்கு எதிரான தனது கருத்தை அவா் பதிவிட்ட அனைத்து சமூக ஊடகங்களிலும், அவருடைய குற்றச்சாட்டுகளுக்கு எதிரான கருத்துகள் அடங்கிய விடியோ பதிவை அவா் வெளியிட வேண்டும்.

அதுமட்டுமன்றி, தனது உற்பத்தி மருந்துகள் கரோனா பாதிப்பை நன்கு குணப்படுத்தக் கூடியது என்ற வகையில் மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் அனைத்து ஊடகங்களிலும் வெளியிட்டு வரும் விளம்பரத்தை அவா் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். அவ்வாறு விளம்பரத்தை நிறுத்தவில்லை எனில், அவா் மீது ஐஎம்ஏ சாா்பில் குற்ற வழக்கும், முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்படும் என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com