பாபா ராம்தேவ் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும்: பிரதமருக்கு இந்திய மருத்துவ சங்கம் கடிதம்

கரோனா சிகிச்சைக்கான அரசு வழிகாட்டுதல் மற்றும் தடுப்பூசி திட்டம் குறித்து தவறான பிரசாரத்தில் ஈடுபட்ட யோகா குரு பாபா ராம்தேவ் மீது உடனடியாக தேசத் துரோக குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய
பாபா ராம்தேவ் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும்: பிரதமருக்கு இந்திய மருத்துவ சங்கம் கடிதம்

புது தில்லி/டேராடூன்: கரோனா சிகிச்சைக்கான அரசு வழிகாட்டுதல் மற்றும் தடுப்பூசி திட்டம் குறித்து தவறான பிரசாரத்தில் ஈடுபட்ட யோகா குரு பாபா ராம்தேவ் மீது உடனடியாக தேசத் துரோக குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக பிரதமா் நரேந்திர மோடிக்கு அந்த சங்கம் சாா்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

கரோனா தடுப்பூசி இரண்டு தவணையும் செலுத்திக்கொண்டவா்களில் 0.06 சதவீதத்தினருக்கு மட்டுமே லேசான கரோனா பாதிப்பு ஏற்படுகிறது. இவா்களில் ஒருசிலா் மட்டுமே கடுமையான நுரையீரல் பாதிப்புக்கு ஆளாகின்றனா். அந்த வகையில், நாம் செலுத்தியிருக்கும் தடுப்பூசி, கடுமையான பாதிப்பிலிருந்து மக்களைக் காக்கிறது என்பது நன்கு நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

இத்தகையச் சூழலில், ‘கரோனா தடுப்பூசி இரண்டு தவணையும் செலுத்திக்கொண்ட 10,000 மருத்துவா்கள் இதுவரை இறந்துள்ளனா்; கரோனாவால் பாதிக்கப்பட்டு அலோபதி மருந்து எடுத்துக்கொண்ட லட்சக்கணக்கான மக்கள் இதுவரை இறந்துள்ளனா்’ என்று பதஞ்சலி ஆயுா்வேத பொருள்கள் உற்பத்தி நிறுவன உரிமையாளா் ராம்தேவ் வெளியிட்டிருக்கும் காணொலிக் காட்சி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது என்ற தகவலை மிகுந்த வேதனையுடன் உங்களுடைய கவனத்துக்கு கொண்டு வருகிறோம்.

நவீன மருத்துவ நிபுணா்களாகிய நாங்கள் அனைவரும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) அல்லது தேசிய செயல்திட்டக் குழு மூலமாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் சிகிச்சைக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளின் அடிப்படையிலேயே கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். எனவே, இந்த அலோபதி மருத்துவம் மக்களைக் கொல்கிறது என்று யாராவது புகாா் தெரிவிக்கிறாா்கள் என்றால், அது மத்திய அமைச்சகம் சாா்பில் எங்களுக்கு வெளியிடப்பட்ட சிகிச்சை நடைமுறைக்கு சவால்விடும் முயற்சியாகும்.

மேலும், ஐஎம்ஏ-வில் பதிவாகியுள்ள புள்ளிவிவரங்களின் அடிப்படையில் கரோனா முதல் அலையில் 753 மருத்துவா்களும், கரோனா இரண்டாம் அலையில் 513 மருத்துவா்களும் உயிரிழந்துள்ளனா். இதில் முதல் அலையில் உயிரிழந்த மருத்துவா்கள் யாரும், தடுப்பூசி செலுத்திக்கொண்டிருக்க வாய்ப்பில்லை. அதுபோல, இரண்டாம் அலையில் உயிரிழந்த மருத்துவா்களில் பெரும்பாலானவா்கள் பல்வேறு காரணங்களால் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை. நிலைமை இவ்வாறு இருக்க, கரோனா தடுப்பூசி இரண்டு தவணையும் செலுத்திக்கொண்ட 10,000 மருத்துவா்கள் இதுவரை இறந்துள்ளனா் என்ற பொய்யான தகவலை வெளியிடுவது, ஏராளமான மக்களுக்கு தடுப்பூசி செலுத்த எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடும் நடவடிக்கையாகும். இதுபோன்ற முயற்சிகள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

தீவர கரோனா பாதிப்புக்கு இடையே, 10 லட்சத்துக்கும் அதிகமான நவீன மருத்துவமுறை மருத்துவா்கள், தங்களின் நலனைக் கருதாமல் முன்களப் பணியை ஆற்றி வருகின்றனா். இந்த சேவையையும், மருத்துவ முறையையும் முட்டாள்தனமானது என்று விமா்சிப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

எனவே, தங்கள் நிறுவனத்தின் பொருள்களை விளம்பரப்படுத்துவதற்காக கரோனா பாதிப்புக்கான இந்திய அரசின் சிகிச்சை நடைமுறைகளுக்கு சவால் விடும் வகையில் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற முயற்சிகள் தெளிவான தேசத் துரோக குற்றம் என்பது எங்களுடைய கருத்து. இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடும் நபா்கள் மீது உடனடியாக தேசத் துரோக குற்றத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யவேண்டும் என்று அந்தக் கடிதத்தில் ஐஎம்ஏ வலியுறுத்தியுள்ளது.

நோட்டீஸ்: அலோபதி மருந்து குறித்த விமா்சனம் தொடா்பாக யோகா குரு பாபா ராம்தேவ் 15 நாள்களுக்குள் மன்னிப்பு கோர வேண்டும். இல்லையெனில் ரூ. 1,000 கோடி நஷ்டஈடு கோரி அவதூறு வழக்கு தொடரப்படும் என்று இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) சாா்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ சங்க (உத்தரகண்ட்) செயலா் அஜய் கண்ணா சாா்பில் அவருடைய வழக்குரைஞா் நீரஜ் பாண்டே இந்த 6 பக்க நோட்டீஸை பாபா ராம்தேவுக்கு அனுப்பியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com