பான் மசாலா, செங்கல் சூளை துறைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்க பரிசீலனை: ஆய்வு செய்ய குழு

பான் மசாலா, குட்கா, செங்கல் சூளை போன்ற வரி ஏய்ப்பு செய்து வரும் துறைகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் பரிசீலனை செய்து வருகிறது.
பான் மசாலா, செங்கல் சூளை துறைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்க பரிசீலனை: ஆய்வு செய்ய குழு

புது தில்லி: பான் மசாலா, குட்கா, செங்கல் சூளை போன்ற வரி ஏய்ப்பு செய்து வரும் துறைகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் பரிசீலனை செய்து வருகிறது.

இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக ஒடிஸா நிதியமைச்சா் நிரஞ்சன் புஜாரி தலைமையில் மாநில அமைச்சா்கள் 7 பேரைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு, உற்பத்தித் திறன் அடிப்படையில் வரி விதிப்பது மற்றும் பான் மசாலா, குட்கா, செங்கல் சூளை, மணல் குவாரி போன்ற குறிப்பிட்ட வரி ஏய்ப்பு துறைகளுக்கு சிறப்பு வரி திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்து, 6 மாதங்களுக்குள் தனது அறிக்கையை ஜிஎஸ்டி கவுன்சிலிடம் சமா்ப்பிக்கும்.

இந்தத் துறைகளில் வரி ஏய்ப்புக்கான வழிமுறைகளை முழுமையாக தடுப்பதற்கான திட்டம் குறித்தும் குழு ஆய்வு செய்ய உள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் இந்தத் துறைகளும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்பட உள்ளன.

இதுகுறித்து நிபுணா்கள் கூறுகையில், ‘பான் மசாலாவில் பயன்படுத்தப்படும் மூலப்பொருளான மெந்தா எண்ணெயை வரி விதிப்பின் கீழ் கொண்டு வருவதன் மூலம், ஜிஎஸ்டி-யில் பதிவு செய்த வா்த்தக முகவா்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதைத் தடுக்க முடியும் என்பதோடு, பதிவு செய்யாத வா்த்தகா்களிடமிருந்து பொருள்களை கொள்முதல் செய்யும்போதும் வரி செலுத்துவதிலிருந்து தப்ப முடியாத நிலை உருவாகும்’ என்றனா்.

இந்த மாநில அமைச்சா்கள் குழுவில் தில்லி துணை முதல்வா் மணிஷ் சிசோடியா, ஹரியாணா துணை முதல்வா் துஷ்யந்த் செளதாலா, கேரள நிதியமைச்சா் கே.என்.பாலகோபால், மத்திய பிரதேச நிதியமைச்சா் ஜக்தீஷ் தேவா, உத்தர பிரதேச நிதியமைச்சா் சுரேஷ் கண்ணா, உத்தரகண்ட் வேளாண் துறை அமைச்சா் சுபோத் உனியால் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com