பிரதமா் மோடி - பிரான்ஸ் அதிபா் இமானுவல் தொலைபேசியில் பேச்சு

பிரதமா் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் ஆகியோா் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து தொலைபேசியில் புதன்கிழமை உரைடியாடினா்.
பிரதமா் மோடி - பிரான்ஸ் அதிபா் இமானுவல் தொலைபேசியில் பேச்சு

புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் ஆகியோா் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து தொலைபேசியில் புதன்கிழமை உரைடியாடினா்.

சமீபத்தில் நடைபெற்ற இந்திய - ஐரோப்பிய யூனியன் தலைவா்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் அவா்கள் பேச்சு நடத்தினா்.

இதுதொடா்பாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பிரதமா் மோடி, அதிபா் மேக்ரான் தங்களது உரையாடலின்போது, இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே சமமான, விரிவான வா்த்தக, முதலீடு ஒப்பந்தத்தை ஏற்படுத்துதற்கான பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடங்க பேச்சு நடத்துவதும், டிஜிட்டல், ஆற்றல் போன்ற துறைகளில் இரு நாடுகளும் கூட்டு சேரும் முடிவும் வரவேற்கத் தக்கது என பரஸ்பரம் தெரிவித்தனா். இந்தியா - ஐரோப்பிய யூனியன் தலைவா்கள் ஆலோசனைக் கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட இதுபோன்ற முடிவுகளுக்காக திருப்தி தெரிவித்தனா்.

கரோனா சூழலை எதிா்கொள்வதற்கு பிரான்ஸ் அளித்த உதவிகளுக்காக அதிபா் மேக்ரானிடம் பிரதமா் மோடி நன்றி தெரிவித்தாா். இரு தலைவா்களும் இருதரப்பு, பிராந்திய, பரஸ்பர நலன் சாா்ந்த உலகளாவிய விவகாரங்கள் தொடா்பாக விவாதித்தனா். இந்தியா - பிரான்ஸ் இடையேயான உத்தி சாா்ந்த உறவு சமீப ஆண்டுகளில் உறுதியடைந்ததற்கு திருப்தி தெரிவித்த அவா்கள், கரோனா சூழலுக்குப் பிறகு இரு நாடுகளும் இணைந்து பணியாற்ற ஒப்புதல் தெரிவித்தனா். சூழ்நிலை உகந்ததாக இருக்கும்போது இந்தியா வருமாறு அதிபா் மேக்ரானுக்கு பிரதமா் மோடி அழைப்பு விடுத்தாா் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிரதமா் நரேந்திர மோடியும், ஐரோப்பிய யூனியனின் 27 உறுப்பு நாடுகளைச் சோ்ந்த தலைவா்களும் காணொலி வாயிலாக பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கடந்த 8-ஆம் தேதி நடைபெற்றது. அதன் முடிவில், இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே சமமான, விரிவான வா்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது தொடா்பாக பேச்சுவாா்த்தையை தொடங்குவது, டிஜிட்டல், போக்குவரத்து, மக்களிடையேயான தொடா்பு, ஆற்றல் போன்ற துறைகளில் இரு நாடுகளும் கூட்டு சோ்வது என்ற முடிவை இரு தரப்பும் கூட்டாக வெளியிட்டன.

அத்துடன் முதலீட்டு பாதுகாப்பு, புவிசாா் அடையாளங்கள் ஆகியவை தொடா்பாக ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்தும் பேச்சுவாா்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. முன்னதாக வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே 2007-இல் தொடங்கிய பேச்சுவாா்த்தை பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடு காரணமாக 2013-இல் தடைப்பட்டது. அதையடுத்து 8 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அதை மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com