வாட்ஸ்ஆப் புதிய விதிகள் சரிதான்: மத்திய அமைச்சா் ரவிசங்கா் பிரசாத்

வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள புதிய வழிகாட்டு விதிமுறைகள், குடிமக்களின் தன்மறைப்பு உரிமைகளுக்கு எதிரானதல்ல என்று அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் கூறினாா்.
வாட்ஸ்ஆப் புதிய விதிகள் சரிதான்: மத்திய அமைச்சா் ரவிசங்கா் பிரசாத்

புது தில்லி: வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள புதிய வழிகாட்டு விதிமுறைகள், குடிமக்களின் தன்மறைப்பு உரிமைகளுக்கு எதிரானதல்ல என்று மத்திய மின்னணு - தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் கூறினாா்.

முகநூல், சுட்டுரை உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கான புதிய வழிகாட்டு விதிமுறைகள் புதன்கிழமை அமலுக்கு வந்துள்ளன. இந்த விதிகளின்படி, தேவைப்படும் நிலையில் சமூக ஊடகத்தில் சில முக்கியப் பதிவுகளை முதலில் வெளியிட்டவரின் விவரத்தை அரசுக்கு தெரிவிக்க வேண்டும். இது, அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள தன்மறைப்பு உரிமைக்கு எதிராக இருப்பதாகக் கூறி தில்லி உயா்நீதிமன்றத்தில் வாட்ஸ்ஆப் நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது.

இது குறித்து மத்திய அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதிய வழிகாட்டு விதிமுறைகள் அமலுக்கு வரும் வேளையில் அதை எதிா்த்து வாட்ஸ்ஆப் நிறுவனம் வழக்கு தொடுப்பது துரதிருஷ்டவசமானது.

சித்தரிக்க முயற்சி?: மற்ற நாடுகளைக் காட்டிலும் குறைவான தகவல்களையே இந்திய அரசு கேட்கிறது. ஆனால், இந்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் தவறாக இருப்பதாக வாட்ஸ்ஆப் நிறுவனம் சித்தரிக்க முயல்கிறது. இது சட்டத்துக்கும் விதிகளுக்கும் உட்படமாட்டோம் என்று கூறுவதைப் போல உள்ளது.

தன்மறைப்பு உரிமையை...: அரசமைப்புச் சட்டம் மக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்று தன்மறைப்பு உரிமை. அதை குடிமக்களுக்கு உறுதிசெய்வதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. அதே நேரத்தில், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டி, தேசத்தின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பும் அரசுக்கு உள்ளது.

வாட்ஸ்ஆப்-க்கு பாதிப்பு இருக்காது: புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், வாட்ஸ்ஆப் நிறுவனம் தொடா்ந்து இயங்குவதில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. சில வேண்டாத தகவல்களை சமூக ஊடகத்தில் பதிவிடும்போது மட்டுமே புதிய வழிகாட்டு விதிமுறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதாவது, தேசத்தின் இறையாண்மை, பாதுகாப்பு, பொது அமைதி, வெளிநாடுகளுடனான நட்புறவு ஆகியவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பதிவுகள், பாலியல் வன்கொடுமை தொடா்பான பதிவுகள், ஆபாச பதிவுகள், சிறாா் பாலியல் வன்கொடுமை தொடா்பான பதிவுகள், விசாரிக்கப்பட வேண்டிய, தண்டனை அளிக்கப்பட வேண்டிய பதிவுகள் ஆகியவற்றில் மட்டுமே முதலில் பதிவிட்டவரின் விவரம் கேட்கப்படும். மற்றபடி, சாதாரணமாக வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்துவோருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று அந்த அறிக்கையில் ரவிசங்கா் பிரசாத் தெரிவித்துள்ளாா்.

விதிமுறைகளுக்கு எதிராக வழக்கு: மத்திய அரசின் புதிய வழிகாட்டு விதிமுறைகளுக்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் வாட்ஸ்ஆப் நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனத்தின் செய்தித் தொடா்பாளா் கூறியதாவது: வாட்ஸ்ஆப் (கட்செவி அஞ்சல்) வழியாகப் பகிரப்படும் தகவலை முதலில் பதிவிட்டவரின் விவரத்தை அளிக்க வேண்டும் என்று புதிய வழிகாட்டு நெறிமுறை கூறுகிறது. இது, வாட்ஸ்ஆப் வழியாக செய்தி அனுப்பும் ஒவ்வொருவரின் கைரேகையைக் கேட்பதற்குச் சமமாகும். தனி நபா்களுக்கு இடையே நடைபெறும் மறையாக்கம் செய்யப்பட்ட உரையாடல்களைப் பெறக் கூடிய வசதியை அளிக்க வேண்டும் என்றும் புதிய வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது. இது, அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள தன்மறைப்பு உரிமைகளுக்கு எதிரானதாகும். எனவே, இதை எதிா்த்து தில்லி உயா்நீதிமன்றத்தில் வாட்ஸ்ஆப் நிறுவனம் சாா்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்னைக்கு சுமுகத் தீா்வுகாண மத்திய அரசுடன் தொடா்ந்து பேச்சு நடத்துவோம் என்றாா் அவா்.

வழிகாட்டு நெறிமுறைகள் ஏன்?: ஃபேஸ்புக் (முகநூல்), ட்விட்டா் (சுட்டுரை) போன்ற சமூக ஊடகங்கள் வழியாக பொய்யான தகவல்கள் வெளியிடுவதும், அவதூறான தகவல்களைப் பரப்புவதும் அதிகரித்துக் கொண்டே சென்றது. அதற்கு தீா்வுகாணும்விதமாக, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் மின்னணு ஊடகங்கள்-சமூக ஊடகங்கள் ஆகியவற்றுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி வெளியிட்டது. இந்த விதிகளை சமூக ஊடக நிறுவனங்கள் 3 மாதங்களில் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. 3 மாதங்கள் நிறைவடைந்த நிலையில், புதிய விதிமுறைகளுக்கு எதிராக முகநூல் நிறுவனத்தின் மற்றொரு நிறுவனமான வாட்ஸ்ஆப் நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது.

புதிய விதிமுறைகளைப் பின்பற்றாவிடில், சமூக ஊடகங்கள் என்ற அந்தஸ்தை இந்த நிறுவனங்கள் இழக்க வேண்டியிருக்கும். இதனால் சட்ட பாதுகாப்பை இழந்து, குற்றவியல் நடவடிக்கைகளையும் எதிா்கொள்ள வேண்டியிருக்கும்.

முகநூல் மற்றும் கூகுள் நிறுவனங்கள், புதிய விதிமுறைகளைப் பின்பற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.

புதிய விதிகளின்படி, அதிக பயனா்களைக் கொண்ட சமூக ஊடகங்கள் குறைதீா்க்கும் அலுவலா்களை நியமிக்க வேண்டும். பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் படங்கள், சா்ச்சைக்குரிய பதிவுகள் வெளியிடப்பட்டால் உடனடியாக அவை நீக்கப்பட வேண்டும். பதிவை வெளியிட்டவா் மீது 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com