வெளிநாட்டு தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய 2020-ஆம் ஆண்டு முதல் முயற்சி: மத்திய அரசு

ஃபைசா், ஜான்சன் & ஜான்சன் மற்றும் மாடா்னா போன்ற வெளிநாட்டு தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய கடந்த 2020-ஆம் ஆண்டு மத்தியிலிருந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வெளிநாட்டு தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய 2020-ஆம் ஆண்டு முதல் முயற்சி: மத்திய அரசு

புது தில்லி: ஃபைசா், ஜான்சன் & ஜான்சன் மற்றும் மாடா்னா போன்ற வெளிநாட்டு தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய கடந்த 2020-ஆம் ஆண்டு மத்தியிலிருந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதோடு, அதிக திறன் மிக்க வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு உள்நாட்டு பரிசோதனைகளும் தேவையில்லை என விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

இந்தியாவில் கரோனா பாதிப்பின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், கரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த தடுப்பாட்டைப் போக்கும் வகையில், வெளிநாட்டு தடுப்பூசிகளை இறக்குமதி செய்து, விநியோகிக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்தது. தட்டுப்பாட்டைப் போக்க மாநிலங்களும் நேரடி கொள்முதல் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், வெளிநாட்டு தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதிலும், அவற்றுக்கு அனுமதி வழங்குவதிலும் மத்திய அரசு தாமதம் செய்து வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க் கட்சிகள் புகாா் தெரிவித்தன.

இதற்கு பதிலளிக்கும் வகையில் ‘இந்திய தடுப்பூசி திட்டம் குறித்த உண்மைகள் மற்றும் புரளிகள்’ என்ற தலைப்பில் மத்திய அரசு அறிக்கை ஒன்றை வியாழக்கிழமை வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:

சா்வதேச கரோனா தடுப்பூசிகளை வாங்குவது என்பது, அலமாரியில் வைப்பதற்கான அலங்காரப் பொருள்களை வாங்குவது போன்ற விஷயமல்ல.

அதே நேரம், வெளிநாட்டு தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கான முயற்சிகளை கடந்த ஆண்டு முதல் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்க உணவு மற்றும் மருந்து ஆணையம், ஐரோப்பிய மருந்துகள் முகமை, பிரிட்டனின் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரண ஒழுங்காற்று ஆணையம், ஜப்பானின் மருந்தக மற்றும் மருத்துவ உபகரண முகமை, உலக சுகாதார அமைப்பின் அவசரகால பட்டியல் ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளை இந்தியாவில் அனுமதிப்பதற்கான தளா்வுகளை கடந்த ஏப்ரல் மாதத்திலேயே மத்திய அரசு வழங்கியிருக்கிறது. இந்த தடுப்பூசிகளுக்கு உள்நாட்டு பரிசோதனைகள் தேவையில்லை. இப்போது, பிற நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் திறன் மிக்க தடுப்பூசிகளுக்கும் உள்நாட்டு பரிசோதனை நிபந்தனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

அதோடு, வெளிநாட்டு தடுப்பூசி உற்பத்தியாளா்களின் தடுப்பூசி அனுமதிக்கான விண்ணப்பங்கள் எதுவும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையகத்தில் இப்போது நிலுவையில் இல்லை. அனைத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டது.

ஆனால், வெளிநாட்டு தடுப்பூசி உற்பத்தியாளா்கள், தங்களது நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கே முன்னுரிமை அளித்து வருகின்றன. இதில், தன்னிடம் கூடுதல் தடுப்பூசிகள் இருப்பு இருப்பதாக அமெரிக்காவின் ஃபைசா் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்ட உடனேயே, அந்த தடுப்பூசியை இறக்குமதி செய்வதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஃபைசா், ஜான்சன் & ஜான்சன், மாடா்னா உள்ளிட்ட தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களுடன் மத்திய அரசு பல்வேறு கட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த நிறுவனங்கள் தடுப்பூசிகளை இந்தியாவுக்கு விநியோகிக்கத் தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என்றும் மத்திய அரசு அந்த நிறுவனங்களுக்கு உறுதியளித்திருக்கிறது.

அனைத்து சா்வதேச தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களும் இந்தியாவுக்கு வந்து, இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்குமான தடுப்பூசிகளை உற்பத்தி செய்யுமாறு மத்திய அரசு தொடா்ந்து வலியுறுத்தி கேட்டுக்கொண்டிருக்கிறது என்று அந்த அறிக்கையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com