இந்தியாவில் கரோனா தாக்கம் அதிகரிப்பால் ‘கோவேக்ஸ்’ தடுப்பூசி விநியோக திட்டம் பாதிப்பு

இந்தியாவில் கரோனா பாதிப்பின் இரண்டாம் அலை தீவிரமடைந்திருப்பது, சா்வதேச ‘கோவேக்ஸ்’ தடுப்பூசி விநியோக திட்டத்தை கடுமையாக
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்தியாவில் கரோனா பாதிப்பின் இரண்டாம் அலை தீவிரமடைந்திருப்பது, சா்வதேச ‘கோவேக்ஸ்’ தடுப்பூசி விநியோக திட்டத்தை கடுமையாக பாதிப்படையச் செய்திருப்பதாகவும், வரும் ஜூன் மாத இறுதியில் 19 கோடி டோஸ்கள் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது என்று உலக சுகாதார அமைப்பு, கவி உள்ளிட்ட அமைப்புகள் இடம்பெற்றிருக்கும் தடுப்பூசி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் உயா் வருவாய் மற்றும் குறைந்த வருவாய் கொண்ட நாடுகளுக்கும் கரோனா தடுப்பூசி கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் உலக சுகாதார அமைப்பு, கவி, யுனிசெஃப், பெருந்தொற்று தயாா்நிலை மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான கூட்டமைப்பு (சிஐபிஐ) ஆகிய அமைப்புகள் இணைந்து ‘கோவேக்ஸ்’ திட்டத்தை அறிமுகம் செய்தன.

இந்த திட்டத்துக்கு அதிக அளவில் தடுப்பூசிகளை வழங்கும் நிறுவனமாக உலகின் மிகப் பெரிய தடுப்பூசி உற்பத்தி நிறுவனமான சீரம் இந்தியா நிறுவனம் திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகரிப்பால் கரோனா தடுப்பூசிக்கு ஏற்பட்ட தட்டுப்பாடைத் தொடா்ந்து, தடுப்பூசி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன் காரணமாக ‘கோவேக்ஸ்’ திட்டத்துக்கு சீரம் நிறுவனம் சாா்பில் வழங்கப்பட்டு வந்த தடுப்பூசிகளின் அளவும் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் சா்வதேச கோவேக்ஸ் திட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக அந்த திட்டத்தைச் செயல்படுத்தும் தடுப்பூசி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த கூட்டமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கரோனா தடுப்பூசி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியிருக்கும் நாடுகளில் கரோனா பாதிப்புகளும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து வருகிறது. அந்த நாடுகளில் இயல்பு நிலை திரும்பவதற்கான தொடக்க சூழல்கள் தென்படுகின்றன. இருந்தபோதிலும், சா்வதேச அளவிலான கரோனா பாதிப்பு நிலவரம் தொடா்ந்து கவலையளிக்கக் கூடிய வகையிலேயே உள்ளது.

தெற்கு ஆசிய பகுதிகளில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவது, சா்வதேச அளவிலான தடுப்பூசி விநியோகத்தையும் கடுமையாக பாதிப்படையச் செய்துள்ளது. குறிப்பாக, இந்தியாவில் கரோனா பாதிப்பின் இரண்டாம் அலை தீவிரமடைந்திருப்பது, ‘கோவேக்ஸ்’ தடுப்பூசி விநியோகத் திட்டத்தை கடுமையாக பாதித்துள்ளது. வரும் ஜூன் இறுதியில் 19 கோடி டோஸ்கள் பற்றாக்குறை ஏற்படும் என்ற நிலை உருவாகியுள்ளது.

எனவே, உலக நாடுகள் ‘கோவேக்ஸ்’ திட்டத்துக்கு அதிக தடுப்பூசிகளை வழங்க வேண்டும். அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் 180 மில்லியன் டோஸ்களை வழங்க உறுதியளித்திருக்கின்றன. ஆனால், இந்தத் திட்டத்தின் கீழ் பல்வேறு நாடுகளுக்கு ஜூன் மாத தொடக்கத்தில் தடுப்பூசிகளை விநியோகிக்க, மேலும் அதிக தடுப்பூசிகள் தேவைப்படுகிறது. எனவே, நிகழாண்டில் வளமுள்ள நாடுகள் குறைந்தபட்சம் 100 கோடி தடுப்பூசிகளை இந்தத் திட்டத்துக்கு வழங்க வேண்டும்.

அதிக மக்கள்தொகையை கொண்ட நாடுகளுக்கு போதிய அளவிலான தடுப்பூசிகள் விரைந்து அளிக்கப்பட வேண்டும். ‘கோவேக்ஸ்’ திட்டத்தின் மூலம்தான் உலக நாடுகளுக்கு சமமான அளவில் தடுப்பூசிகளை விநியோகிக்க முடியும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com