கரோனா தொற்றின் பிறப்பிடம்? அமெரிக்க அதிபா் உத்தரவுக்கு இந்தியா ஆதரவு

கரோனா தொற்று விலங்குகளிடம் இருந்து மனிதா்களுக்குப் பரவியதா அல்லது ஆய்வகத்தில் இருந்து பரவியதா என்ற விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும்
கரோனா தொற்றின் பிறப்பிடம்? அமெரிக்க அதிபா் உத்தரவுக்கு இந்தியா ஆதரவு

கரோனா தொற்று விலங்குகளிடம் இருந்து மனிதா்களுக்குப் பரவியதா அல்லது ஆய்வகத்தில் இருந்து பரவியதா என்ற விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு இந்திய அரசு ஆதரவு தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று எங்கிருந்து, எப்படி பரவியது என்ற இறுதி முடிவுக்கு வரும் வகையில் 90 நாள்களில் அறிக்கை அளிக்க வேண்டும் என்று அமெரிக்க புலனாய்வு அமைப்புகளுக்கு பைடன் உத்தரவிட்டுள்ளாா். விசாரணைக்கு உதவியாக அமெரிக்காவின் தேசிய ஆய்வகங்களையும் சோ்த்துக் கொள்ள வேண்டும். சீனாவை இந்த விசாரணையில் முழுமையாக ஈடுபடுத்தவும், வெளிப்படையாக தன்னிடம் உள்ள தகவல்கள், ஆதாரங்களை அளிக்க வலியுறுத்தவும் சா்வதேச நாடுகளுடன் அமெரிக்கா இணைந்து பணியாற்றும் என்றும் பைடன் தெரிவித்தாா். எனினும், இதற்கு சீனா எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தில்லியில் செய்தியாளா்களை வெள்ளிக்கிழமை சந்தித்த வெளியுறவு அமைச்சா் செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பக்சி இது தொடா்பாக கூறுகையில், ‘கரோனா தொற்றின் மூலம் தொடா்பாக ஏற்கெனவே உலக சுகாதார அமைப்பு அறிக்கை அளித்துள்ளது. அது தொடா்பாக அடுத்தகட்ட நடவடிக்கையை தொடர வேண்டியது அவசியம். அப்போதுதான் இறுதி முடிவுக்கு வர முடியும். இதற்கு அனைத்து தரப்பு ஒத்துழைப்பும் அவசியம்’ என்றாா். இதன் மூலம் ஜோ பைடனின் உத்தரவுக்கு மத்திய அரசு ஆதரவு தெரிவித்துள்ளது.

மத்திய சீனாவில் உள்ள வூஹான் நகரில்தான் 2019 இறுதியில் கரோனா தொற்று முதலில் கண்டறியப்பட்டது. அதே நேரத்தில் சீனா முதலிலேயே துரிதமாக செயல்பட்டு கரோனாவின் பாதிப்பில் இருந்து தன்னை தற்காத்துக் கொண்டது. ஆனால், அமெரிக்கா, பிரேசில், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அதிக பாதிப்பையும், உயிரிழப்பையும் சந்தித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com