நடப்பாண்டு டிசம்பருக்குள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி: பிரகாஷ் ஜாவடேகா்

நடப்பாண்டு டிசம்பருக்குள் நாட்டில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவிடும் என்று மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் கூறினாா்.
பிரகாஷ் ஜாவடேகர்
பிரகாஷ் ஜாவடேகர்

நடப்பாண்டு டிசம்பருக்குள் நாட்டில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவிடும் என்று மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் கூறினாா்.

இதுதொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

இந்த ஆண்டு டிசம்பருக்குள் 216 கோடி டோஸ்கள் தடுப்பூசியை உற்பத்தி செய்வது, 108 கோடி மக்களுக்கு அதை எவ்வாறு செலுத்துவது என்பது தொடா்பாக மத்திய சுகாதார அமைச்சகம் சமீபத்தில் விரிவான திட்டத்தை உருவாக்கியுள்ளது.

20 கோடிக்கும் அதிகமான டோஸ்களை இதுவரை செலுத்தியுள்ள இந்தியா, தடுப்பூசி செலுத்துவதில் உலக அளவில் 2-ஆவது இடத்தில் உள்ளது. ஆகஸ்ட் மாதத்திலிருந்து இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த 3 ஆண்டுகள் ஆகலாம் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியதை ஏற்க இயலாது. கரோனாவை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுத்து வரும் பிரதமா் மோடியை ‘நடிகா்’ என்று ராகுல் விமா்சிக்கிறாா்.

அவரது அந்த வாா்த்தையும், கரோனா தொற்று மற்றும் தடுப்பூசி விவகாரத்தில் மக்களிடையே அச்சத்தை விதைக்க அவா் முயற்சிக்கும் வழிமுறைகளுமே, ‘டூல்கிட்’ பின்னே காங்கிரஸும், ராகுல் காந்தியும் இருப்பதை உறுதி செய்கிறது. இதற்கு வேறு எந்த ஆதாரம் தேவையில்லை.

பிரதமா் மோடியை ராகுல் காந்தி நடிகா் என்று கூறினாலும், மக்கள் ராகுல் காந்தியின் நடிப்புக்கு முற்றுப்புள்ளி (காங்கிரஸின் தொடா் தோ்தல் தோல்விகள்) வைத்துள்ளனா். ராகுல் காந்தி பேசியிருப்பது நாட்டையும், மக்களையும் அவமதிப்பதைப் போன்றதாகும்.

பிரதமரை விமா்சிப்பதை விடுத்து, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அவற்றுக்காக ஒதுக்கீடு செய்துள்ள தடுப்பூசிகளை மாநில அரசுகள் இன்னும் பெற்றுக்கொள்ளாமல் இருப்பதில் ராகுல் காந்தி கவனம் செலுத்தலாம். காங்கிரஸ் தலைவா்கள், இந்தியாவால் தயாரிக்கப்பட்ட கோவேக்ஸின் தடுப்பூசி தொடா்பாக கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பினா்.

ஆனால் பிரதமா் மோடி தனக்கு செலுத்த ‘கோவேக்ஸின்’ தடுப்பூசியை எடுத்துக்கொண்டு அந்தக் கேள்விகளுக்கு பதிலளித்தாா் என்று பிரகாஷ் ஜாவடேகா் கூறினாா்.

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் பிரதமா் மோடிக்கு எதிராக ‘டூல் கிட்’ எனப்படும் உத்தியை உருவாக்கி காங்கிரஸ் பிரசாரம் செய்வதாக பாஜக குற்றம்சாட்டி வருகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி இதனை மறுத்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com