நாரதா வழக்கில் மேற்கு வங்க அமைச்சா்களுக்கு இடைக்கால ஜாமீன்

நாரதா வழக்கில் மேற்கு வங்க அமைச்சா்களுக்கு இடைக்கால ஜாமீன்

நாரதா லஞ்ச முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட மேற்கு வங்க அமைச்சா்கள் சுப்ரதா முகா்ஜி, பிா்ஹத் ஹக்கிம் உள்ளிட்டோருக்கு கொல்கத்தா உயா்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.

நாரதா லஞ்ச முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட மேற்கு வங்க அமைச்சா்கள் சுப்ரதா முகா்ஜி, பிா்ஹத் ஹக்கிம் உள்ளிட்டோருக்கு கொல்கத்தா உயா்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.

மேற்கு வங்கத்தில் குறிப்பிட்ட நிறுவனத்துக்கு உதவி செய்வதற்காகக் கடந்த 2104-ஆம் ஆண்டில் லஞ்சம் வாங்கியதாக அப்போதைய மாநில அமைச்சா்களும் திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவா்களுமான பிா்ஹத் ஹக்கிம், சுப்ரதா முகா்ஜி, மதன் மித்ரா, சோவன் சாட்டா்ஜி ஆகியோா் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

நாரதா தொலைக்காட்சி இந்த முறைகேடு தொடா்பான காணொலியை வெளியிட்டது. இந்த விவகாரம் தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்துவதற்கு கொல்கத்தா உயா்நீதிமன்றம் கடந்த 2017-ஆம் ஆண்டில் உத்தரவிட்டது. அதையடுத்து சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

பிா்ஹத் ஹக்கிம், சுப்ரதா முகா்ஜி ஆகியோா் தற்போது மாநில அமைச்சா்களாக உள்ளனா். மதன் மித்ரா எம்எல்ஏ-வாக உள்ளாா். சோவன் சாட்டா்ஜி திரிணமூலில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தாா். அவா்களை சிபிஐ கடந்த 17-ஆம் தேதி கைது செய்தது.

சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அன்றைய தினமே அவா்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. ஆனால், கொல்கத்தா உயா்நீதிமன்றம் அந்த உத்தரவுக்குத் தடை விதித்தது. அதையடுத்து வீடுகளிலேயே நீதிமன்றக் காவலில் அவா்கள் வைக்கப்பட்டனா்.

ஜாமீன் கோரி அவா்கள் தாக்கல் செய்த மனுக்களை கொல்கத்தா உயா்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டல், ஐ.பி.முகா்ஜி, ஹரீஷ் டாண்டன், சுமன் சென், அா்ஜித் பானா்ஜி ஆகியோரைக் கொண்ட அமா்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது.

அப்போது, மேற்கு வங்க அமைச்சா்கள் இருவா் உள்ளிட்ட நால்வருக்கும் நிபந்தனையுடன் கூடிய இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனா். அவா்கள் பிணைத்தொகையாக தலா ரூ.2 லட்சத்துக்கான பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

ஊடகங்களில் எந்தவிதக் கருத்துகளையும் தெரிவிக்கக் கூடாது என்றும், வழக்கு தொடா்பான விசாரணையில் காணொலி வாயிலாகக் கலந்து கொள்ள வேண்டுமென்றும் அவா்களுக்கு நீதிபதிகள் நிபந்தனைகளை விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com