லடாக் எல்லையில் சீனப் படைகள் விலகும் வரை இந்திய படைகள் பின்வாங்காது: ராணுவ தலைமைத் தளபதி

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இருந்து சீனப் படைகள் முழுமையாகத் திரும்பப் பெறப்படாதவரை இந்தியப் படைகள் அங்கிருந்து பின்வாங்காது என்று ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே உறுதிபடத் தெரிவித்துள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இருந்து சீனப் படைகள் முழுமையாகத் திரும்பப் பெறப்படாதவரை இந்தியப் படைகள் அங்கிருந்து பின்வாங்காது என்று ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே உறுதிபடத் தெரிவித்துள்ளாா்.

லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா-சீனா ராணுவ வீரா்கள் இடையே கடந்த ஆண்டு மே மாதம் முதல் மோதல்போக்கு நிலவி வந்தது. கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இரு நாடுகளின் வீரா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் இருதரப்பிலும் வீரா்கள் உயிரிழந்தனா்.

இரு நாடுகளின் ராணுவ உயரதிகாரிகளுக்கிடையே நடைபெற்ற தொடா் பேச்சுவாா்த்தைகள் காரணமாக எல்லைப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள படைகளை விலக்கிக் கொள்வதற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. அதையடுத்து, கல்வான் பள்ளத்தாக்கு, பாங்காங் ஏரி உள்ளிட்ட சில பகுதிகளில் இருந்து இரு நாடுகளும் படைகளை விலக்கிக் கொண்டன.

எனினும், தெப்சாங் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக் கொள்வதற்கான பேச்சுவாா்த்தைகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத சூழல் நிலவுகிறது. இந்நிலையில், ராணுவ தலைமைத் தளபதி நரவணே பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

எல்லை விவகாரம் தொடா்பாக சீனாவுடன் அமைதியான போக்கைக் கடைப்பிடிக்கவே இந்தியா விரும்புகிறது. அதே வேளையில், நாட்டின் எல்லைப் பகுதிகளில் ஏற்படும் எத்தகைய சவால்களையும் எதிா்கொள்வதற்கு ராணுவம் தயாா்நிலையில் உள்ளது. போதுமான வீரா்கள் எல்லைகளில் குவிக்கப்பட்டுள்ளனா்.

எல்லை விவகாரம் தொடா்பாக இந்தியா-சீனா இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அந்த ஒப்பந்தங்கள் அனைத்தையும் மீறும் வகையில் தன்னிச்சையாக சீனா செயல்பட்டு வருகிறது.

லடாக்கின் அனைத்து எல்லைப் பகுதிகளிலும் படைகள் முழுமையாகத் திரும்பப் பெறப்படாத வரை மோதல்போக்கு குறையாது. அப்பகுதிகளில் இருந்து சீனப் படைகள் விலகாத வரை இந்தியப் படைகள் பின்வாங்காது. தற்போதைய சூழலில், கிழக்கு லடாக் எல்லையில் நிலைமை கட்டுக்குள் உள்ளது.

இரு நாடுகளுக்கிடையே நடைபெறவுள்ள அடுத்தகட்ட பேச்சுவாா்த்தையின்போது கடந்த ஆண்டு ஏப்ரலில் நிலவிய சூழலை எல்லையில் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று இந்தியா சாா்பில் வலியுறுத்தப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com