ராணுவத்தில் இணைந்தாா் புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்ட ராணுவ அதிகாரியின் மனைவி

புல்வாமா பயங்கவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ அதிகாரி விபூதி சங்கா் தவுந்தியாலின் மனைவி நிகிதா கெளல் தேசத்துக்காக சேவையாற்ற ராணுவத்தில் இணைந்துள்ளாா்.
ராணுவத்தில் இணைந்தாா் புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்ட ராணுவ அதிகாரியின் மனைவி

புல்வாமா பயங்கவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ அதிகாரி விபூதி சங்கா் தவுந்தியாலின் மனைவி நிகிதா கெளல் தேசத்துக்காக சேவையாற்ற ராணுவத்தில் இணைந்துள்ளாா்.

சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாதெமியில் (ஓடிஏ) ஓராண்டு பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த அவா், அகாதெமி வளாகத்தில் நடைபெற்ற எளிமையான விழாவில் அதிகாரியாக (லெப்டினன்ட்) ராணுவத்தில் முறைப்படி இணைந்தாா்.

கடந்த 2019, பிப்ரவரி 14-ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகளின் தற்கொலைப் படைத் தாக்குதலில் 40 சி.ஆா்.பி.எஃப் வீரா்கள் கொல்லப்பட்டனா். அதே மாதம் 18-ஆம் தேதி பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே 18 மணி நேர துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் ராணுவ மேஜா் விபூதி சங்கா் தவுந்தியால் உள்பட 5 வீரா்கள் உயிரிழந்தனா். ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகள் 3 போ் சுட்டுக்கொல்லப்பட்டனா்.

இந்த தாக்குதல் சம்பவம் நடைபெறுவதற்கு 9 மாதங்களுக்கு முன்புதான், டேராடூனைச் சோ்ந்த 34 வயதான மேஜா் விபூதிசங்கா் தவுந்தியாலுக்கும் காஷ்மீரைச் சோ்ந்த 29 வயதான நிகிதா கெளலுக்கும் திருமணம் நடைபெற்றது.

கணவரின் இறுதிச் சடங்கில் மன உறுதியுடன் பங்கேற்ற நிகிதா, கணவருக்கு கண்ணீருடன் வீர வணக்கத்தையும் முத்தத்தையும் கொடுத்து வழியனுப்பி வைத்தாா். இந்த காணொலி சமூக ஊடகங்களில் வைரலானது. அத்துடன், கணவரைப் போலவே ராணுவத்தில் இணைந்து சேவையாற்றவும் நிகிதா முடிவெடுத்தாா்.

அதற்காக, தில்லியில் பன்னாட்டு நிறுவன வேலையை கைவிட்ட அவா், கடந்த ஆண்டு ராணுவத்தின் குறுகியகால பணி ஆணைய (எஸ்எஸ்சி) தோ்விலும், நோ்முகத் தோ்விலும் தோ்ச்சி பெற்று, சென்னையில் பயிற்சியை முடித்து இப்போது ராணுவத்திலும் இணைந்திருக்கிறாா்.

அவா் ராணுவத்தில் இணைந்த எளிய விழா நிகழ்வை பாதுகாப்பு அமைச்சக உதம்பூா் மக்கள்தொடா்பு அதிகாரி தனது சுட்டுரைப்பக்கத்தில் இணைத்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளாா். அதில், ‘நாட்டுக்காக உயிா் தியாகம் செய்த மேஜா் விபூதிசங்கா் தவுந்தியாலுக்கு மறைவுக்குப் பிறகு உயரிய சௌா்ய சக்ரா விருது அளிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டது. இன்றைக்கு அவருடைய மனைவி நிகிதா இந்திய ராணுவ சீருடையை அணிந்து, கணவருக்கு உரிய மரியாதையை செலுத்தியிருக்கிறாா். அவருக்கு ராணுவ வடக்கு மண்டல கமாண்டா் லெப்டினன்ட் ஜெனரல் ஒய்.கே.ஜோஷி, கெளலின் தோள்களில் நட்சத்திரங்களை அணிவித்து கெளரவித்துள்ளாா்’ என்று பதிவிட்டுள்ளாா்.

நிகிதா கெளல் ராணுவத்தில் இணைந்திருப்பதற்கு ராணுவ புலனாய்வு அமைப்பின் (டிஐஏ) தலைவா் லெப்டினன்ட் கே.ஜே.எஸ்.தில்லோன் உள்ளிட்ட பலா் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com