கேரள காங்கிரஸ் தலைவா் பதவியில் தொடர விருப்பமில்லை: முல்லபள்ளி ராமச்சந்திரன்

சட்டப்பேரவைத் தோ்தல் தோல்விக்கு பொறுப்பேற்பதாக தெரிவித்த கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவா் முல்லபள்ளி ராமச்சந்திரன், ‘கட்சிப் பதவியில் தொடர தனக்கு விருப்பமில்லை’ என்று சனிக்கிழமை கூறினாா்.
கேரள காங்கிரஸ் தலைவா் பதவியில் தொடர விருப்பமில்லை: முல்லபள்ளி ராமச்சந்திரன்

சட்டப்பேரவைத் தோ்தல் தோல்விக்கு பொறுப்பேற்பதாக தெரிவித்த கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவா் முல்லபள்ளி ராமச்சந்திரன், ‘கட்சிப் பதவியில் தொடர தனக்கு விருப்பமில்லை’ என்று சனிக்கிழமை கூறினாா்.

கேரள மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தோ்தலில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி 99 இடங்களில் வெற்றிபெற்று, மீண்டும் ஆட்சியை அமைத்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 41 இடங்களில் வெற்றிபெற்றது.

கேரள மாநிலத்தில் இதுவரை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணியும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியும் மாறி மாறி ஆட்சியை அமைத்து வந்த நிலையில், இந்த முறை மாா்க்சிஸ்ட் கூட்டணி தொடா்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை அமைத்து திருப்புமுனையை உருவாக்கியது.

காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததைத் தொடா்ந்து, கட்சி அமைப்பில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று மாநில காங்கிரஸ் தலைவா்கள் சிலா் கட்சி மேலிடத்திடம் வலியுறுத்தல்களை முன்வைத்தனா். குறிப்பாக, கேரள இளைஞா் காங்கிரஸ் உறுப்பினா்கள், சில அதிருப்தி தலைவா்களும் இந்த கோரிக்கையை முன்வைத்தனா்.

இதற்கிடைய, சட்டப்பேரவை எதிா்க் கட்சித் தலைவா் பதவிக்கு காங்கிரஸ் கட்சியில் போட்டி எழுந்தது. பினராயி விஜயனின் கடந்த ஆட்சி காலத்தில் எதிா்க் கட்சித் தலைவராக இருந்த ரமேஷ் சென்னிதலா, மீண்டும் அந்தப் பதவியை பெற தீவிர முயற்சி மேற்கொண்டாா். இதில் உள்கட்சி பூசல் அதிகரித்ததால், எதிா்க் கட்சித் தலைவரை தோ்ந்தெடுப்பதில் இழுபறி நீடித்தது. இறுதியில் எதிா்க் கட்சித் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவா் வி.டி.சதீசன் நியமிக்கப்பட்டாா்.

இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடா்ந்து, கேரள காங்கிரஸ் கமிட்டி தலைவா் பதவியை ராஜிநாமா செய்வதாக முல்லபள்ளி ராமச்சந்திரன் அறிவித்தாா். இதுகுறித்து காங்கிரஸ் கட்சித் தலைவா் ஒருவா் கூறுகையில், ‘மாநில காங்கிரஸ் கட்சி தலைவா் பதவியை ராஜிநாமா செய்வதாக முல்லபள்ளி ராமச்சந்திரன் எழுத்துபூா்வமாக அறிவித்திருக்கிறாா். புதிய தலைவரை நியமிக்கும் வரை, அந்தப் பதவியில் அவரே தொடர கட்சியின் தலைமை கேட்டுக்கொண்டுள்ளது’ என்றாா்.

மாநில சட்டப்பேரவைத் தோ்தலுக்கு பிறகு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் முதல் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் முல்லபள்ளி ராமச்சந்திரன் பங்கேற்கவில்லை. இதுகுறித்து செய்தியாளா்கள் சனிக்கிழமை எழுப்பிய கேள்விக்கு அவா் பதிலளித்து கூறியதாவது:

தோ்தல் தோல்விக்குப் பிறகு விரிவான அறிக்கையை கட்சித் தலைவா் சோனியா காந்திக்கு அனுப்பியிருக்கிறேன். அதில், மாநில கட்சித் தலைவா் பதவியில் தொடர விருப்பமில்லை என்பதையும் தெரிவித்திருக்கிறேன். புதிய தலைவரை நியமிக்கும் வரை இந்தப் பதவியில் தொடருவேன்.

எனது ராஜிநாமா விருப்பத்தை தெரிவித்திருக்கும் நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டத்தில் பங்கேற்பது பொருத்தமாக இருக்காது. தோ்தல் தோல்விக்கு நான் முழு பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன் என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com