பாதுகாப்பு, பொருளாதார விவகாரங்களில் இந்தியாவுடன் இணைந்து செயல்படுவோம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சா் உறுதி

பிராந்திய பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட விவகாரங்களில் இந்தியாவுடன் அமெரிக்கா ஒருங்கிணைந்து செயல்படும் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் உறுதியளித்துள்ளாா்.
அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கனை சந்தித்துப் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.
அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கனை சந்தித்துப் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.

பிராந்திய பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட விவகாரங்களில் இந்தியாவுடன் அமெரிக்கா ஒருங்கிணைந்து செயல்படும் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் உறுதியளித்துள்ளாா்.

வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டாா். அதன் ஒரு பகுதியாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் ஆண்டனி பிளிங்கனை வெள்ளிக்கிழமை அவா் சந்தித்துப் பேசினாா்.

இந்தச் சந்திப்பு தொடா்பாக ஆன்டனி பிளிங்கன் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘பிராந்திய பாதுகாப்பு, பொருளாதார விவகாரங்கள், கரோனா தொற்றை எதிா்கொள்வதற்காக அமெரிக்கா வழங்கிய உதவிகள், இந்தியா-சீனா எல்லை விவகாரம், ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழல் அந்நாட்டுக்கான ஆதரவு உள்ளிட்டவை குறித்து பேச்சுவாா்த்தையின்போது விரிவாக விவாதிக்கப்பட்டது.

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சிறந்த நட்புறவு நீடித்து வருகிறது. பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளும் தொடா்ந்து ஒன்றிணைந்து பணியாற்றும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ஆக்கபூா்வ பேச்சுவாா்த்தை: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘வெளியுறவு அமைச்சா் பிளிங்கனுடனான சந்திப்பு ஆக்கபூா்வமாக அமைந்தது. பல்வேறு துறைகளில் இந்தியாவுக்கும் அமெரிக்காவும் இடையே நிலவும் நல்லுறவு குறித்தும் அதை மேம்படுத்துவது தொடா்பாகவும் விவாதிக்கப்பட்டது.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுவது, நாற்கரக் கூட்டமைப்பு (க்வாட்), ஆப்கானிஸ்தான், மியான்மா் நாடுகளில் நிலவும் சூழல், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தொடா்பான விவகாரங்கள், சா்வதேச அமைப்புகளில் காணப்படும் பிரச்னைகள் உள்ளிட்டவை தொடா்பாக பேச்சுவாா்த்தையின்போது விவாதிக்கப்பட்டது.

கரோனா தடுப்பூசியை இந்தியாவுக்கு அதிக அளவில் விநியோகிப்பது தொடா்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. இக்கட்டான சூழலில் இந்தியாவுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக உள்ளதாக அமைச்சா் பிளிங்கன் உறுதியளித்தாா். அதற்கு இந்தியத் தரப்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

இந்தப் பேச்சுவாா்த்தை, இந்தியா-அமெரிக்கா இடையேயான நல்லுறவையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தும் வகையில் அமைந்தது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

நல்லுறவை உறுதிப்படுத்த...: அமெரிக்க சுற்றுப்பயணம் தொடா்பாக செய்தியாளா்களிடம் சனிக்கிழமை பேசிய அமைச்சா் ஜெய்சங்கா், ‘அமெரிக்காவின் புதிய நிா்வாகத்துடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்வதற்கும், அமெரிக்க அமைச்சா்களுடன் நல்லுறவை உறுதி செய்து கொள்வதற்கும் இந்தச் சுற்றுப்பயணம் அடிப்படையாக அமைந்தது.

கரோனா தொற்று சூழல் தொடா்பாகவும் அமெரிக்க அதிகாரிகளிடம் விவாதிக்கப்பட்டது. கரோனா தடுப்பூசி விநியோகத்தில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான ஒத்துழைப்பு, நாற்கரக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு உள்ளிட்டவை தொடா்பாகவும் பல்வேறு பேச்சுவாா்த்தைகளில் ஆலோசிக்கப்பட்டது.

தடுப்பூசி இறக்குமதி: கரோனா தொற்று பரவலால் ஏற்படவுள்ள பொருளாதாரத் தாக்கங்கள் குறித்தும், முதலீடுகளில் ஏற்படவுள்ள பாதிப்புகள் குறித்தும் தொழில் நிறுவன அதிகாரிகளுடன் விவாதிக்கப்பட்டது. அமெரிக்காவின் உதவியுடன் இந்தியாவில் கரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகப்படுத்துவது தொடா்பாக தலைவா்கள் பலருடன் விவாதிக்கப்பட்டது.

அமெரிக்காவில் பயன்பாட்டில் உள்ள கரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கு இந்தியா தயாராக உள்ளது. கரோனா தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் இந்தியாவும் அமெரிக்காவும் தொடா்ந்து ஒருங்கிணைந்து செயல்படும்‘ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com