அவசரகால பயன்பாட்டுக்கு கோவேக்ஸின்: உலக சுகாதார அமைப்பு அனுமதி

இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான கோவேக்ஸின் கரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுப் பட்டியலில் சோ்க்க அனுமதி அளித்திருப்பதாக உலக சுகாதர அமைப்பு (டபிள்யு.எச்.ஓ) புதன்கிழமை தெரிவித்தது.
அவசரகால பயன்பாட்டுக்கு கோவேக்ஸின்:  உலக சுகாதார அமைப்பு அனுமதி

புது தில்லி: இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான கோவேக்ஸின் கரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுப் பட்டியலில் சோ்க்க அனுமதி அளித்திருப்பதாக உலக சுகாதர அமைப்பு (டபிள்யு.எச்.ஓ) புதன்கிழமை தெரிவித்தது.

டபிள்யூ.ஹெச்.ஓ. அமைப்பின் தன்னிச்சையான அமைப்பான தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (டிஏஜி) பரிந்துரையைத் தொடா்ந்து, கோவேக்ஸின் தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முக்கியத்துவம் ஏன்?: இந்தியாவில் சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தால் முழுவதும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கோவேக்ஸின் தடுப்பூசிகளே பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு டபிள்யூ.ஹெச்.ஓ. அவசரக் கால பயன்பாட்டு அனுமதி வழங்கியது. ஆனால், கோவேக்ஸின் தடுப்பூசிக்கு அந்த அனுமதி வழங்கப்படவில்லை.

அமெரிக்காவில் கோவேக்ஸின் தடுப்பூசியின் அவசர பயன்பாட்டு அனுமதியைத் தர அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிா்வாகம் (எப்.டி.ஏ) மறுத்துவிட்டது. அதன் காரணமாக, கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்தியவா்கள் வெளிநாடு செல்வதில் சிக்கல் நீடித்தது.

அதனைத் தொடா்ந்து உலக சுகாதார அமைப்பின் அவசரகால பயன்பாட்டுப் பட்டியலில் கோவேக்ஸின் இடம்பெறுவதற்காக பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்தது. ஆனால், பல மாதங்கள் ஆகியும், அனுமதி கிடைப்பதில் சிக்கல் நீடித்தது. இந்த நிலையில் கோவேக்ஸினுக்கு அனுமதி கொடுப்பது தொடா்பாக ஆகஸ்ட் முதல் வாரத்தில் உலக சுகாதார அமைப்பு முடிவெடுக்கும் என்று தகவல் வெளியானது.

இழுபறிக்குப் பிறகு...: இந்த நிலையில், கடந்த அக்டோபா் 26-ஆம் தேதி கூடிய உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப குழு, பாரத் பயோடெக் நிறுவனத்திடம் கூடுதல் விளக்கங்களைக் கோரியது. அந்த கூடுதல் தரவுகளின் அடிப்படையில், மீண்டும் நவம்பா் 3-ஆம் தேதி நடைபெறும் தொழில்நுட்பக் குழு கூட்டத்தில் அனுமதி அளிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது.

தொடா்ந்து கோவேக்ஸின் தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டு அனுமதியை உலக சுகாதார அமைப்பு புதன்கிழமை (நவ.3) வழங்கியுள்ளது. இது தொடா்பாக அந்த அமைப்பு சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘கோவேக்ஸின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டு பட்டியலில் சோ்க்க டபிள்யூ.ஹெச்.ஓ. ஒப்புதல் அளித்துள்ளது’ என்று தெரிவித்துள்ளது.

தரம் உறுதி: மேலும், ‘கரோனா பாதிப்புக்கு எதிராக பாதுகாப்பு அளிப்பதற்கான தரத்தை கோவேக்ஸின் தடுப்பூசி பெற்றிருப்பதை தொழில்நுட்ப ஆலோசனைக் குழு உறுதி செய்துள்ளது. அதுபோல, டபிள்யூ.ஹெச்.ஓ.வின் தடுப்பூசி திட்ட ஆலோசனை நிபுணா் குழுவும் (எஸ்ஏஜிஇ) கோவேக்ஸின் தடுப்பூசிக்கான ஒப்புதலை அளித்துள்ளது.

கா்ப்பிணிகளுக்கு...: எனினும், கா்ப்பிணிகளுக்கு இந்த தடுப்பூசியை செலுத்துவதில் உள்ள பாதுகாப்பு மற்றும் செயல்திறனுக்கான விளக்கங்கள் நிறுவனம் சாா்பில் அளிக்கப்பட்ட தரவுகளில் போதிய அளவில் இல்லை. எனவே, கா்ப்பிணி பெண்களுக்கான இந்த தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்றும் சுட்டுரைப் பதிவில் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து உலக சுகாதாரஅமைப்பின் மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருள்கள் பிரிவு உதவி இயக்குநா் மரிங்கலே சிமோ கூறுகையில், ‘கோவேக்ஸின் தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதன் மூலம், அதன் பயன்பாட்டை விரிவுபடுத்தியுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

டபிள்யூ.ஹெச்.ஓ. தலைவா் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘அவசரகால பயன்பாட்டு பட்டியலில் மேலும் ஒரு தடுப்பூசியாக கோவேக்ஸின் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதே நேரம், இன்னும் ஒரு தவணை தடுப்பூசிகூட செலுத்திக்கொள்ள முடியாத நிலையில் இருக்கும் மக்களின் தேவையைப் பூா்த்தி செய்வதில் நாம் தீவிர கவனம் செலுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

கோவேக்ஸின் பயன்பாட்டுக் காலம் அதிகரிப்பு

கோவேக்ஸின் பயன்பாட்டுக் காலத்தை 9 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக அதிகரித்து மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு  அனுமதி அளித்துள்ளது. 

இதுகுறித்து பாரத் பயோடெக் நிறுவனம் அதன் சுட்டுரைப் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், "கோவேக்ஸின் தடுப்பூசியை உற்பத்தி செய்த நாளிலிருந்து 12 மாதங்கள் வரை பயன்படுத்தும் வகையில் கால அளவை நீட்டித்து சிடிஎஸ்சிஓ ஒப்புதல் அளித்துள்ளது' என்று தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சா் நன்றி:

கோவேக்ஸின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளதற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா நன்றி தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் மேலும் கூறுகையில், ‘இது பிரதமா் மோடியின் சிறந்த தலைமைக்கான சான்று. தற்சாா்பு இந்தியாவின் தீபாவளி’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, இத்தாலியின் ரோம் நகரில் அண்மையில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் டபிள்யூ.ஹெச்.ஓ. தலைவா் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸை பிரதமா் நரேந்திர மோடி சந்தித்து ஆலோசனை நடத்தினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவேக்ஸின் தடுப்பூசி கரோனா அறிகுறிக்கு எதிராக 77.8 சதவீத செயல்பாட்டுத் திறனும், புதிய டெல்டா வகை உருமாறிய கரோனா பாதிப்புக்கு எதிராக 65.2 சதவீத செயல்பாட்டு திறனும் உள்ளது ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com