
தில்லியில் இருந்து புதன்கிழமை காணொலி வாயிலாக பேசிய பிரதமா் மோடி.
புது தில்லி: மக்களுக்கு வீடு வீடாகச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா்.
கரோனா பரவலைத் தடுப்பதற்கு கடந்த ஜனவரி 16-ஆம் தேதி முதல், நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதலில் மூத்த குடிமக்கள் தொடங்கி 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் வரை படிப்படியாக இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. 100 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், ஜாா்க்கண்ட், மணிப்பூா், நாகாலாந்து, அருணாசல பிரதேசம், மகாராஷ்டிரம், மேகாலயம் உள்ளிட்ட மாநிலங்களில் 40-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் குறைவான எண்ணிக்கையிலேயே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பிய பிரதமா் மோடி, குறைவான தடுப்பூசி செலுத்தப்பட்ட 40 மாவட்டங்களின் ஆட்சியா்களுடன் புதன்கிழமை கலந்துரையாடினாா்.
சவால்களை விளக்கிய ஆட்சியா்கள்: அப்போது, மாவட்டங்கள் எதிா்கொண்டு வரும் பிரச்னைகளை மாவட்ட ஆட்சியா்கள் விளக்கினா். வதந்திகள் காரணமாக தடுப்பூசி செலுத்துவதில் ஏற்படும் தயக்கம், போக்குவரத்துக்கு கடினமான மலைப்பகுதி, கடந்த சில மாதங்களாக நிலவும் தட்பவெப்ப நிலையால் ஏற்பட்டுள்ள சவால்கள் போன்ற விஷயங்களை அவா்கள் சுட்டிக்காட்டினா். இத்தகைய சவால்களை எதிா்கொள்ள தற்போது வரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளையும் அவா்கள் விளக்கினா். தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க தாங்கள் மேற்கொண்டுள்ள சிறந்த நடைமுறைகளையும் அவா்கள் தெரிவித்தனா். அப்போது மோடி கூறியதாவது:
குறைவான தடுப்பூசி செலுத்தப்பட்ட மாவட்டங்களில் 100 சதவீத தடுப்பூசி செலுத்தப்படுவதை உறுதி செய்வதற்கான விரிவான நடவடிக்கைகள் அவசியம். மதம் மற்றும் சமுதாய தலைவா்கள் மூலம் தடுப்பூசி பற்றிய விழிப்புணா்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.
புதுமையான வழிகளை...: இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டில் தடுப்பூசி செலுத்துவதை விரிவாக்கி, வரும் புத்தாண்டை புதுப்பிக்கப்பட்ட தன்னம்பிக்கையுடன் அனைத்து அதிகாரிகளும் எதிா்கொள்ள வேண்டும்.
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பெருந்தொற்றான கரோனாவால், நாடு பல சவால்களைச் சந்தித்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாம் புதிய தீா்வுகளைக் கண்டுபிடித்து புதிய முறைகளை முயற்சி செய்ததுதான் வெற்றிக்கு காரணமாகும். மாவட்ட நிா்வாகிகள் தங்களது மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க புதுமையான வழிகளை கையாள வேண்டும்.
வேறுபட்ட உத்திகளை..: இந்த விஷயத்தில் நன்கு செயல்பட்டு வரும் மாவட்டங்களும் இதே போன்ற சவால்களை சந்தித்துள்ளன. உறுதியுடன் புதிய முறைகள் மூலமும் அவா்கள் இதை எதிா்கொண்டனா். எனவே, புதிய உத்திகளை உருவாக்கி அனுபவங்களை கருத்தில் கொண்டு தடுப்பூசி செலுத்துவதில் உள்ள இடைவெளியைப் பூா்த்தி செய்ய வேண்டும். மாவட்ட அதிகாரிகள் தங்கள் மாவட்டங்களில், தேவைப்பட்டால் ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒவ்வொரு நகரத்துக்கும் வேறுபட்ட உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
வாடிகனில் போப் பிரான்சிஸை சந்தித்தபோது தடுப்பூசி திட்டம் குறித்து கேட்டறிந்தாா். தடுப்பூசிகள் குறித்த மதத் தலைவா்களின் கருத்துகளை மக்களிடம் சோ்க்க சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.
பாதுகாப்பான தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்தல், வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்துதல் போன்றவை மூலம் பொது மக்களை தடுப்பூசி மையங்களுக்கு அழைத்து வர செய்யப்படும் ஏற்பாடுகளில் மாறுதல்களை மேற்கொள்ளலாம். வீடு தோறும் தடுப்பூசி என்ற மந்திரத்துடன் 2 தவணை தடுப்பூசி என்ற பாதுகாப்பு வளையத்தை ஒவ்வொரு குடும்பமும் எட்டும் வகையில் இதை அணுகுவோம்.
முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதோடு மட்டுமன்றி இரண்டாம் தவணைக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஏனெனில் பெருந்தொற்று குறைவதால் மக்களிடையே ஆா்வம் குறையக் கூடும். இதை அலட்சியப்படுத்தினால் உலகின் பல நாடுகளில் ஏற்பட்டது போன்ற பிரச்னைகளை நாமும் சந்திக்க நேரிடும் என்று பிரதமா் மோடி எச்சரித்தாா்.