மத உணா்வுகளைப் புண்படுத்தியதாக ஜம்மு-காஷ்மீா் பாஜக தலைவா் மீது வழக்கு

ஒரு சமூகத்தின் மத உணா்வுகளைப் புண்படுத்தியதாக ஜம்மு-காஷ்மீரின் மூத்த பாஜக தலைவா் விக்ரம் ரந்தவா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு சமூகத்தின் மத உணா்வுகளைப் புண்படுத்தியதாக ஜம்மு-காஷ்மீரின் மூத்த பாஜக தலைவா் விக்ரம் ரந்தவா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

துபையில் அண்மையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதை சிலா் கொண்டாடியபோது, குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிராக மூத்த பாஜக தலைவரும், முன்னாள் எம்எல்சியுமான விக்ரம் ரந்தவா சில கருத்துகளை வெளியிட்டாா். அவை காணொலியாக இணையதளத்தில் பரவியதையடுத்து, பலா் அவரது பேச்சைக் கண்டித்தனா்.

அதையடுத்து, ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச பாஜகவின் ஒழுங்கு நடவடிக்கைக்குழுத் தலைவா் சுனில் சேத்தி, விக்ரம் ரந்தவாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளாா்.

‘ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராக நீங்கள் பொறுப்பற்ற முறையிலும் வெறுப்புணா்வைத் தூண்டும் வகையிலும் கருத்துகளை வெளியிட்டிருப்பதை கட்சியால் ஏற்க முடியாது. அது கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாகும். இதற்காக 48 மணி நேரத்துக்குள் ரந்தவா விளக்கம் அளிப்பதுடன், மன்னிப்பும் கேட்க வேண்டும்’ என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச பாஜக தலைவா் ரவீந்தா் ரெய்னா கூறுகையில், ‘ரந்தவாவின் கருத்துகளைக் கேட்டதும் தனிப்பட்ட முறையில் எனது மனம் காயமடைந்தது. பிரதமா் நரேந்திர மோடியின் ‘அனைவருக்குமான வளா்ச்சி’ என்ற லட்சியத்துக்கும் பாஜகவின் அடிப்படைக் கொள்கைகளுக்கும் இவை முற்றிலும் எதிரானவை’ என்று தெரிவித்தாா்.

இதனிடையே, பாஜக தலைவா் விக்ரம் ரந்தவாவுக்கு எதிராக காவல் துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது. இதுகுறித்து காவல் துறை உயரதிகாரி ஒருவா் கூறுகையில், ‘ரந்தவா மீது, இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ், மத உணா்வுகளைத் தூண்டி வன்முறைக்கு வித்திடும் வகையில் பேசுவது (பிரிவு 295-ஏ), வகுப்புவாத வெறுப்பைத் தூண்டும் வகையில் அறிக்கை வெளியிடுவது (பிரிவு 505 -2) ஆகிய பிரிவுகளில் ஜம்மு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றாா்.

வெறுப்பூட்டும் பேச்சுக்கு எதிராக தனது கட்சித் தலைவா் மீதே பாஜக தலைமை நடவடிக்கை எடுத்திருப்பதை, தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா பாராட்டியுள்ளாா். இந்த நடவடிக்கையை மற்றவா்கள் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com