கேதார்நாத்தில் ஸ்ரீஆதி சங்கராச்சாரியாரின் சமாதியை திறந்து வைத்தார் மோடி

கேதார்நாத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியதோடு, நிறைவு பெற்ற திட்டப் பணிகளை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
கேதார்நாத்தில் ஸ்ரீஆதி சங்கராச்சாரியாரின் சமாதியை திறந்து வைத்தார் மோடி
கேதார்நாத்தில் ஸ்ரீஆதி சங்கராச்சாரியாரின் சமாதியை திறந்து வைத்தார் மோடி

புது தில்லி: கேதார்நாத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியதோடு, நிறைவு பெற்ற திட்டப் பணிகளை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

ஸ்ரீ ஆதிசங்கராச்சாரியரின் சமாதியைத் தொடங்கிவைத்த அவர் ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியரின் உருவச்சிலையைத் திறந்துவைத்தார். ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட, தற்போது நடைபெறுகிற அடிப்படை கட்டமைப்புப் பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

2013ஆம் ஆண்டு வெள்ளத்தில் அழிந்ததால் ஸ்ரீ ஆதிசங்கராச்சாரியரின் சமாதி மறுகட்டுமானம் செய்யப்பட்டது. 

கேதார்நாத் கோவில் நிகழ்வோடு நாடு முழுவதும் உள்ள பல இடங்களிலிருந்தும், நான்கு கோவில்களிலிருந்தும், 12 ஜோதிர்லிங்கங்களுக்குப் பூஜைகள் நடத்தப்பட்டன. அனைத்து நிகழ்வுகளும் கேதார்நாத் கோவிலின் பிரதான நிகழ்வோடு இணைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், ‘சில அனுபவங்கள் மிகவும் இயற்கைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். அளவிடமுடியாத அதுபற்றி வார்த்தைகளில் விவரிக்க இயலாது’ என்று பொருள்தரும் என்ற ராம் சரித மானஸ் ஸ்லோகத்தைப் பிரதமர் மேற்கோள் காட்டினார். இவ்வாறுதான் பாபா கேதார்நாத் ஆலயத்தில் தாம் உணர்ந்ததாக அவர் கூறினார்.

கூடாரங்கள், வரவேற்பு மையங்கள் போன்ற புதிய வசதிகள் பூசாரிகள் மற்றும் பக்தர்களின் வாழ்க்கையை எளிதாக்கும் என்று குறிப்பிட்ட பிரதமர் புனித யாத்திரையின் தெய்வீக அனுபவத்தில் முழுமையாக ஈடுபட அவர்களை அனுமதிக்கும் என்றார். 2013ல் கேதார்நாத்தில் ஏற்பட்ட வெள்ளத்தை நினைவுகூர்ந்த பிரதமர், பல ஆண்டுகளுக்கு முன் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்கள் கற்பனை செய்ய முடியாதவை. “இங்கே வந்த மக்கள் நமது கேதார் ஆலயம் மீண்டும் எழுந்து நிற்குமா என்று நினைத்தார்கள், ஆனால் இது முன் எப்போதையும் விட கூடுதல் பெருமிதத்தோடு நிற்கும் என்று எனது உள்மனம் கூறியது”. 

ஆதி சங்கராச்சாரியா பற்றி பேசிய மோடி, ஷங்கர் என்பதற்கு நன்மை செய்யும் ஒருவர் என்று பொருள். இந்த இலக்கணம் ஆச்சார்ய ஷங்கரால் நேரடியாக நீரூபிக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை மிகவும் சிறப்புடையது, சாமானிய மக்களின் நலனுக்கு வாழ்க்கையை அவர் அர்ப்பணித்துக்கொண்டிருந்தார்.

“அயோத்தியில் பகவான் ஸ்ரீ ராமரின் மாபெரும் ஆலயம் உருவாகிவருகிறது, அயோத்யா தனது புகழை மீண்டும் பெறுகிறது. இரண்டு நாட்களுக்கு முன் அயோத்யாவில் தீபோத்சவம் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டதை ஒட்டுமொத்த உலகமும் பார்த்தது. இதிலிருந்து தொன்மையான இந்தியக் கலாசாரம் எவ்வாறு இருந்திருக்கவேண்டும் என்பதை நாம் கற்பனை செய்துகொள்ளலாம் என்றார் மோடி.

விடுதலைப் போராட்ட வீரர்களின் பங்களிப்பு பற்றி பேசிய பிரதமர் இந்தியாவின் புகழ்மிக்க விடுதலைப்போராட்டம் தொடர்பான இடங்களுக்கும், புனித யாத்திரைக்கான பக்திசார்ந்த இடங்களுக்கும் பயணம் செய்யவேண்டும் என்றும் இதன் மூலம் இந்தியாவின் உணர்வை அறிந்துகொள்ள வேண்டும் என்றும் நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டார்.

21ம் நூற்றாண்டின் மூன்றாவது பத்தாண்டு உத்தராகண்டுக்கு உரியது. சார்தாம் நெடுஞ்சாலைகளுடன் இணைப்பை ஏற்படுத்தும் சார்தாம் சாலைத் திட்டப்பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணி தொடங்கப்பட்டுவிட்டதால் எதிர்காலத்தில் பக்தர்கள் கேதார்நாத் ஆலயத்திற்குக் கம்பிவட வாகனம் மூலம் வரமுடியும்.

இதன் அருகே புனிதமான ஹேம்குந் சாஹிபும் உள்ளது. ஹேம்குந் சாஹிபை எளிதாக தரிசனம் செய்வதற்குக் கம்பிவடப் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

புவியியல் ரீதியான சிரமங்களை விஞ்சி, உத்தராகண்டும் அதன் மக்களும் 100 சதவீத முதல் தவணை தடுப்பூசி இலக்கை இன்று சாதித்துள்ளனர். இதுதான் உத்தராகண்டின் பலமும் சக்தியும் ஆகும் என்று மோடி கூறினார்.

சரஸ்வதி நதியின் நம்பிக்கைப் பாதையின் இரு மருங்கிலும் செய்துமுடிக்கப்பட்ட மற்றும் நடைபெற்றுவரும் பணிகளைப் பிரதமர் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். சரஸ்வதி நதியின் நம்பிக்கைப் பாதையில் தற்காப்புச்சுவர் மற்றும் சதுக்கங்கள், மந்தாகினி நதியின் நம்பிக்கைப் பாதையில் தற்காப்புச்சுவர், தீர்த்த ப்ரோஹித இல்லங்கள், மந்தாகினி நதியின் குறுக்கே உள்ள கருட் சட்டி பாலம் உள்ளிட்ட முக்கியமான அடிப்படை கட்டமைப்புத் திட்டங்கள் பூர்த்தியடைந்துள்ளன.

இந்தத் திட்டங்கள் 130 கோடிக்கும் கூடுதலான செலவில் நிறைவேற்றப்பட்டுள்ளன. சங்கம் சதுக்க மறு சீரமைப்பு, முதலுதவி மற்றும் சுற்றுலா வரவேற்பு மையம், நிர்வாக அலுவலகம் மற்றும் மருத்துவமனை, இரண்டு விருந்தினர் விடுதிகள், காவல் நிலையம், கட்டுப்பாட்டு மையம், மந்தாகினி நதியின் நம்பிக்கைப் பாதையில் வரிசை நிர்வாகம், மழை பாதுகாப்பு முகாம் மற்றும் சரஸ்வதி நதிக்கரையில் மக்கள் சேவைக்கான கட்டிடம் உள்ளிட்ட ரூ.180 கோடிக்கும் கூடுதல் மதிப்புள்ள பல்வகை திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com